என்னுயிர் தோழன் பாபுவின் தாய் காலமானார்.. மகன் இழப்பை தாங்க முடியாமல் உயிரிந்த சோகம்!
படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தினால் உயிரிழந்த நடிகர் பாபுவின் இறப்பைத் தொடர்ந்து, அவரது அன்னையும் உயிரிழந்துள்ளது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
என்னுயிர் தோழன் பாபு
1990ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய என்னுயிர் தோழன் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் பாபு. இந்தப் படம் பெரியளவில் வெற்றிபெறா விட்டாலும் பாபுவின் நடிப்பு விமர்சகர்களால் கவனிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் விக்ரமன் இயக்கிய பெரும்புள்ளி , தாயம்மா உள்ளிட்ட படங்களில் நடித்தார் பாபு.
பல்வேறு கனவுகளுடம் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருந்தார் அந்த நடிகர். ஆனால் 1991ஆம் ஆண்டு வெளியான பொண்ணுக்கு சேதி வந்தாச்சு திரைப்படம் பாபு நடித்து வெளியான கடைசி திரைப்படமாக அமையப் போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரிந்திருக்காது.
60 வயதில் உயிரிழப்பு
மனசார வாழ்த்துங்களேன் என்கிற திரைப்படத்தின் நடித்து வந்தார் நடிகர் பாபு. படப்பிடிப்பின்போது எற்பட்ட எதிர்பாராத விபத்தின் காரணமாக படுகாயம் அடைந்தார் பாபு. இந்த விபத்தில் அவரது முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டதால் பாபுவின் உடல் செயலற்று போனது. கனவுகளுடன் நிறைந்த அந்த நடிகரை விதி செயலற்று ஒரே இடத்தில் இருக்கும்படி செய்துவிட்டது. தனக்கு பிடித்த சினிமாவில் ஏதாவது ஒரு வகையில் தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்று விரும்பிய பாபு 1997ஆம் ஆண்டு ராதா மோகன் இயக்க இருக்கவிருந்த ஸ்மைல் ப்ளீஸ் என்கிற படத்திற்கு வசனங்கள் எழுதினார். ஆனால் இந்தப் படம் வெளியாகாமல் போனது.
நடிகர் பாபுவின் நெருங்கிய நண்பரான நடிகர் பொன்வண்ணன் பாபுவின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்க இருப்பதாக அறிவித்தார். இந்த முயற்சி இதுவவரை நிறைவேறாமல் இருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கும் மேல் சிகிச்சைப் பெற்று வந்த பாபு கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தனது 60 வயதில் காலமானார்.
இந்நிலையில், தன் மகன் பாபுவின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாத அவரது தாயார் பிரேமலதா இன்று செப்டம்பர் 10 ஆம் தேதி காலமானார். தாய் மகன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சினிமாவின் துயரப் பக்கம்
சினிமாவில் வெற்றிபெற்றவர்களை நாம் தினம்தோறும் கொண்டாடி வருகிறோம். ஆனால் அதே சினிமாவில் கனவுகளோடு நுழைந்து திறமைகள் இருந்து உழைப்பைக் கொடுத்தும் வெளி உலகத்திற்கு தெரியாமல் போனவர்களின் கதைகள் நம்மைச் சுற்றி நிறைய இருக்கின்றன. இன்று சினிமா படப்பிடிப்பின்போது ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படும் கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு தேவையான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றி விவாதங்கள் தொடங்கி இருக்கின்றன. ஆனால் சினிமா பெரிய அளவில் வளர்ச்சியடையாத ஒரு காலத்தில் நடிகர் பாபுவிற்கு நடந்த விபத்தும் அதனால் அவர் இழந்ததும் எதனாலும் ஈடு செய்ய முடியாதது.