சீமான் தான் எனக்கு அதை புரியவைத்தார்...டப்பிங் ஆர்டிஸ்ட் சவிதா ரெட்டி சொன்ன தகவல்
தமிழ் பற்று என்று நாம் எல்லாரும் பேசினாலும் உண்மையான தமிழ் பற்றை தான் சீமானுடன் வேலை செய்யும்போது தான் பார்த்ததாக டப்பிங் கலைஞர் சவிதா ரெட்டி தெரிவித்துள்ளார்

சீமான்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசிய கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சீமானுக்கு எதிராக திராவிட கொள்கைகளைப் பின்பற்றும் பலரும் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். மேலும், பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் போலி என்றும், அதைத் தான் எடிட் செய்ததாக சங்ககிரி ராஜ்குமார் கூறியதும் சீமானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி 3 ஆயிரம் பேர் இணைந்திருப்பது சீமானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தொடர் சர்ச்சையில் இருக்கும் சீமான் குறித்து நெகட்டிவான கருத்துக்கள் மட்டுமே பரவி வரும் நிலையில் பிரபல டப்பிங் கலைஞர் சவிதா ரெட்டி சீமான் பற்றிய பாசிட்டிவான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
சீமானின் தமிழ் பற்று - சவிதா ரெட்டி
ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் பேசி பிரபலமானவர் சவிதா ரெட்டி. சிம்ரன் , த்ரிஷா , ஜோதிகா , சினேகா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார் சவிதா ரெட்டி. சீமான் இயக்கிய வாழ்த்துகள் படத்தில் பாவனா கதாபாத்திரத்திற்கு சவிதா டப்பிங் பேசியிருந்தார். இந்த படத்தில் சீமான் உடன் பணியாற்றிய அனுபவத்தைப் பற்றி அவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
"நிறைய பேர் தமிழ் பற்று என்று சொல்வார்கள். ஆனால் என்னுடைய வேலையில் உண்மையான தமிழ் பற்றை நான் பார்த்தது இயக்குநர் சீமானிடம் தான். டப்பிங்கின் போது உதவி இயக்குநர் வந்து என்னிடம் கதை சுருக்கம் சொல்லவா என்று கேட்டார். பின் இந்தாங்க தாள் என்று டப்பிங் பேப்பரை கொடுத்தார் . வணக்கம் செல்வி சவிதா அவர்களே என்று ஒரு குரல் கேட்டு திரும்பி பார்த்தபோது சீமான் நின்றிருந்தார். தயாரா என்று என்னிடம் கேட்டார் . நான் ரெடி சார் என்றேன். மறுபடியும் தயாரா என்று கேட்டார் நான் ரெடி என்றேன். மீண்டும் தயாரா என்று கேட்டபோது நான் தயார் என்றேன். ரெக்கார்டிங் டேக் என்று சொல்லாமல் பதிவு என்றுதான் சொன்னார். நம் வாழ்க்கையில் எவ்வளவு ஆங்கில வார்த்தைகளை கலந்து பேசி தமிழை மறந்துவிட்டிருக்கிறோம் என்பதை சீமான் அந்த படத்தில் எனக்கு புரிய வைத்தார். " என சவிதா தெரிவித்துள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

