Crime: நோ சொன்ன டெக்கீ.. வயதை மீறிய காதல், வேலையை காட்டிய டீன் ஏஜர்.. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Crime: பாலியல் இச்சைக்கு இணங்காத மென்பொருள் ஊழியரை, 18 வயது இளைஞர் கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது.

Crime: தீ விபத்தில் இளம்பெண் மூச்சுத்திணறி இறந்ததாக கருதப்பட்ட நிலையில், அவர் கொல்லப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
விபத்து அல்ல.. கொலை..
பெங்களூருவில் தான் வசித்து வந்த வாடகை விட்டில் இளம்பெண் ஒருவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் எதிர்பாராத விபத்தில், மூச்சு திணறி அவர் உயிரிழந்ததாக கருதப்பட்டது. ஆனால், காவல்துறையின் விசாரணையில் பாலியல் இச்சைக்கு இணங்காததால் அந்த பெண், 18 வயது இளைஞரால் கொல்லப்பட்டது அம்பலமாகியுள்ளது. அக்சென்சர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மென்பொருள் ஊழியரான ஷர்மிளா (34), ராமமூர்த்தி நகரில் சுப்ரமணி லே-அவுட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஜனவரி 3ம் தேதி தனது அபார்ட்மெண்டில் ஏற்பட்ட தீ விபத்தின்போது மூச்சு திணறி உயிரிழந்தார். இது தற்கொலையாக கூட இருக்கலாம் என ஆரம்பத்தில் கருதப்பட்டது.
அம்பலமான உண்மை..
பெண்ணின் உடலை கண்டெடுத்த போலீசார், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து, விசாரணையை முடுக்கிவிட்டனர். அப்போது அறிவியல் வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாராங்கள் அடிப்படையில், ஷர்மிளாவின் வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டில் வசித்து வந்த கர்னல் குராய் என அடையாளம் காணப்பட்ட நபர் மீது சந்தேகம் கொண்டுள்ளனர். தொடர்ந்து அவரை தேடும் பணியையும் முடுக்கிவிட்ட காவல்துறை, தலைமறைவாக இருந்த நபரை கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஷர்மிளாவை கொன்ற உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

நடந்தது என்ன?
காவல்துறை விசாரணையில், “பாலியல் ரீதியான இச்சையுடன் கடந்த 3ம் தேதி இரவு 9 மணியளவில் ஜன்னல் வழியாக ஷர்மிளாவின் வீட்டிற்குள் நுழைந்தேன். ஆனால், அவர் என்னுடைய ஆசைக்கு இணங்க மறுத்தார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ள மற்றும் வாக்குவாதத்தை தொடர்ந்து, அவரது வாய் மற்றும் மூக்கை கைகளால் பொத்தி அரை மயக்க நிலையை அடைய செய்துள்ளார். அப்போது ஷர்மிளாவிற்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வடிய தொடங்கியுள்ளது. இப்படியே விட்டுச் சென்றால் சிக்கிக் கொள்வோமென கருதி கழுத்தை நெறித்து கொலை செய்தேன்” என கர்னல் குராய் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டமிட்டு ஏற்படுத்திய தீ விபத்து..
இதையடுத்து சம்பவம் தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் வகையில், ஷர்மிளாவின் உடைகள் மற்றும் அன்றைய சம்பவம் தொடர்பான பொருட்களை கட்டிலின் மீது போட்டு தீயிட்டு கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் அந்த பெண்ணின் செல்போனையும் திருடிச் சென்றுள்ளார். வாக்குமூலம் மற்றும் உறுதிப்படுத்தும் ஆதாரங்களைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 103(1) (கொலை), 64(2), 66, மற்றும் 238 (ஆதாரங்களை அழித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அடுத்தகட்ட விசாரணையும் நடைபெற்று வருகிறது. பக்கத்துவீட்டுக்காரர் என்ற அடிப்படையில் கர்னல் குராயிடம் ஷர்மிளா அவ்வப்போது பேசியுள்ளார். ஆனால், அந்த இளைஞர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. கல்லூரி இரண்டாமாண்டு பயின்று வரும் இளைஞர், தனது தாயுடன் அந்த பகுதியில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.





















