Chennai rowdy murder: அதிகாலையில் பயங்கரம்.!அரசு மருத்துவமனைக்குள் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை- யார் இந்த ஆதி.?
Chennai rowdy murder : சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஒருவர் அதிகாலையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் தோழியை பார்க்க வந்த ரவுடி
சென்னையில் அதிகாலையில் அரசு மருத்துவமனையில் ரவுடி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்க்கப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கானோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் அங்கு பிரசவ வார்டும் உள்ளது. இந்த நிலையில் சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஆதி என்ற ஆதிகேசவன் (20). இவரது பெண் தோழியான சுசித்ரா என்பவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்து இறந்துள்ளது. இது தொடர்பாக தகவலை சுசித்ரா தெரிவித்ததையடுத்து மருத்துவமனைக்கு தனது பெண் தோழியை பார்க்க ரவுடி ஆதி வந்துள்ளார்.
மருத்துவமனை வளாகத்தில் தங்கிய ரவுடி
நேற்று இரவு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து தனது தோழியை ஆதி பார்த்துள்ளார். அப்போது உடன் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சாருமதி என்பவரையும் அழைத்து வந்தார். தனது தோழிக்கு துணையாக நேற்று இரவு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் புதிய வார்டு பகுதியில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது ஆதி அசந்து தூங்கிய நிலையில் அதிகாலையில் அடையாளம் தெரியாத 3 பேர் ஹெல்மெட் அணிந்து அங்கு வந்து ரவுடி ஆதியை பட்டாகத்தியால் கொடூரமாக வெட்டி விட்டு தப்பி விட்டனர்.
அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்
இந்த சம்பவத்தை பார்த்த மருத்துவமனையில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளும் பயத்தில் அலறி துடித்தனர். அப்போது வெட்டுப்பட்ட காயத்தால் உயிருக்கு போராடிய ஆதியை அங்கு இருந்தவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் ஆதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து ஆதியின் உடல் பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக சுசித்ரா, சாருமதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திட்டமிட்டு கொலையை அரங்கேற்றியதாக போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
யார் இந்த ஆதி.?
சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஆதி என்ற ஆதிகேசவன் (20). இவர் ராஜமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாவர். கொலை வழக்கு உள்பட 9 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.






















