Driver Jamuna: பெண் ஓட்டுனருக்கு ஆட்டோ பரிசு.. 'டிரைவர் ஜமுனா' படக்குழு அசத்தல்..!
இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நாற்பதிற்கும் மேற்பட்ட பெண் ஓட்டுநர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவருக்கு புதிய ஆட்டோ ஒன்றினை படக்குழுவினர் பரிசாக வழங்கினர்.

பெண் ஓட்டுநருக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட டிரைவர் ஜமுனா படக்குழுவினர் ஆட்டோ பரிசளித்த செயல் கவனம் ஈர்த்துள்ளது.
டிரைவர் ஜமுனா:
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண் ஓட்டுநர்களில் ஒரு பெண்மணியை தேர்வு செய்து, அவருக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய ஆட்டோ ஒன்றினை 'டிரைவர் ஜமுனா' படக்குழு நன்கொடையாக வழங்கியது. இதனை அப்படத்தின் நாயகியான 'ஐஸ்வர்யா ராஜேஷ்' பயனாளிக்கு வழங்கி கௌரவித்தார்.
18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரி தயாரித்து, இம்மாதம் முப்பதாம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாடகை வாகனத்தை இயக்கும் ஓட்டுநராக நடித்திருக்கிறார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
View this post on Instagram
பெண் ஆட்டோ ஓட்டுநர்கள்:
இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நாற்பதுக்கு மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் படத்தில் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் கலந்துரையாடல் நடத்தி, ஓட்டுனராக பணியாற்றிய போது நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர்.
சமூகத்தில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் தொழில்களில் வாகன வாடகை வாகனத்தை இயக்கும் ஓட்டுநர் தொழிலும் ஒன்று. இன்று இந்தத் தொழிலிலும் பெண்கள் நுழைந்து பயிற்சி பெற்று, திறமை மிக்க ஓட்டுனர்களாக வலம் வருகின்றனர்.
புதிய ஆட்டோ பரிசு:
சுய தொழில் செய்து குடும்பத்தின் மேன்மைக்காக அயராது பாடுபடும் பெண்களை கௌரவிக்கும் வகையில், இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நாற்பதிற்கும் மேற்பட்ட பெண் ஓட்டுநர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவருக்கு புதிய ஆட்டோ ஒன்றினை படக் குழுவினர் பரிசாக வழங்கினர். இது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த பெண் ஓட்டுநர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இது இருந்த நிலையில், டிரைவர் ஜமுனா படக்குழுவினரின் இந்த முயற்சி சமூக வலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.





















