Dancing Rose | சார்பட்டா ரோஸ் தெரியும்... ரியலான "டான்சிங் ரோஸ்" யாரென்று தெரியுமா...?
ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டாவில், நாயகன் கபிலன் கதாபாத்திரத்திற்கு இணையாக வில்லன் கதாபாத்திரம் வேம்புலி, ரங்கன் வாத்தியார், டாடி, டான்சிங் ரோஸ், வெற்றி கதாபாத்திரங்களும் சிறப்பாக கட்டமைக்கப்பட்டது
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய திரைப்படங்கள் மூலமாக தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் பா.ரஞ்சித். இவர் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் சார்பட்டா. இந்த படம் ஊரடங்கு காரணமாக அமேசான் ஓடிடி தளத்தில் கடந்த 22-ந் தேதி வெளியானது.
அமேசான் தளத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக அமைந்த சார்பட்டாவிற்கு மிகுந்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது. 1980 காலகட்டத்தில் வட சென்னை பகுதிகளில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம்பெற்றுள்ளது.
தொடக்கத்தில் நகைச்சுவையாக காட்டப்பட்ட அந்த கதாபாத்திரத்தின் குத்துச்சண்டை திறனை விளக்கும் காட்சியும், நாயகன் கபிலனுடன் டான்சிங் ரோஸ் மோதும் அந்த இடைவெளி காட்சியும் படத்தின் மிகப்பெரிய பலம். அந்த காட்சியில் டான்சிங் ரோசாக நடித்த ஷபீர் கல்லக்கல் தனது நடிப்பில் காட்டிய வித்தியாசம் அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது. சார்பட்டா பரம்பரையின் கதாபாத்திரங்ளுக்கு உண்மையில் சொந்தக்காரர்கள் என்று அலசும் விமர்சகர்களும், சமூக வலைதளவாசிகளும் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்திற்கு உண்மையில் சொந்தக்காரர் என்று தீவிரமாக நடத்திய தேடுதல் வேட்டைக்கான பதில் நசீம் ஹமீத். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் தெற்கு யார்க்ஷையரில் 1974ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி பிறந்தவர். சிறுவயது முதல் குத்துச்சண்டையில் மிகுந்த ஆர்வமான இவர் 1992ம் ஆண்டு முதல் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
குத்துச்சண்டை அரங்கத்திற்குள் மற்ற வீரர்கள் மிகவும் கோபத்துடனும், ஆக்ரோஷத்துடனும் எதிர்த்து ஆடும் வீரர்களை பயமுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கியபோது, நசீம் ஹமீது மட்டும் ஒரு ராப் பாடகர் போல ஆடிக்கொண்டே களத்திற்குள் வருவார். களத்திற்குள் வரும்போது மட்டுமில்லாமல், குத்துச்சண்டையின்போது ஒரு நடன கலைஞர் போலவே ஆடிக்கொண்டே சண்டையிடுவார். இதன் காரணமாவே, நசீம் ஹமீது ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர்.
அரங்கத்திற்குள் உள்ளே நுழையும் விதம் எவ்வாறு வித்தியாசமாக இருந்ததோ, அதேபோல இவர் ஆடும் விதமும் வித்தியாசமாக இருந்தது. இதன்காரணமாக, அவரை எதிர்த்து ஆடிய வீரர்கள் நசீம் ஹமீத்திடம் தொடர்ந்து திணறினர். தனது அபார ஆட்டத்தாலே அவர் 20 வயதிலே ஐரோப்பிய பாண்டம் வெயிட் டைட்டிலை வென்றார். 1994ம் ஆண்டு சர்வதேச சூப்பர் பாண்டம்வெயிட் டைட்டிலை வென்றார். உலக குத்துச்சண்டை அமைப்பின் சாம்பியன் பட்டத்தையும் 1995 முதல் 2000ம் வரை வென்றுள்ளார். உலக குத்துச்சண்டை கழகத்தின் டைட்டிலையும் 1999 முதல் 2000ம் ஆண்டு வரை கைப்பற்றியுள்ளார். இவ்வாறு குத்துச்சண்டை போட்டிகளில் ஏராளமான வெற்றிகளை பெற்றுள்ளார்.
1992ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி முதல் குத்துச்சண்டை போட்டிகளில் ஆடி வந்த பிரின்ஸ் நசீம் ஹமீத் 2002ம் ஆண்டு வரை மொத்தம் 37 போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் அவர் 36 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக இவரை பிரின்ஸ் என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர். இவரும் போட்டியின்போது தனது இடுப்பில் பிரின்ஸ் என்று பெயர் பொறித்த பட்டையுடனே ஆடினார். 2001ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடைபெற்ற போட்டியில் மட்டும் மார்கோ ஆண்டனியோ பாரிரேவிடம் தோல்வியை தழுவியுள்ளார். ஆனாலும், 2002ம் ஆண்டு மே 18ந் தேதி தனது இறுதிப்போட்டில் அடுத்த ஆண்டு மானுவல் கால்வோ என்பவரை லண்டனில் வீழ்த்தி சர்வதேச குத்துச்சண்டை வாழ்க்கையை வெற்றியுடனே நிறைவு செய்தார்.
பிரின்ஸ் நசீம் ஹமீத் தனது குத்துச்சண்டை வாழ்க்கையில் மிகவும் பலம் மற்றும் திறமைவாய்ந்த ராபின்சன், மெடினா, ஜான்சன், பாடிலோ, கெல்லே, சோடோ, புங்கு, சான்செஸ் பாரிரோ, கால்வோ ஆகிய ஜாம்பவன்களுடன் எல்லாம் மோதியுள்ளார். காதலர் தினத்தன்று தனது ஆக்ஷன் வாழ்க்கையைத் தொடங்கிய நசீம் ஹமீத், சார்பட்டா பரம்பரை படத்தில் வரும் வசனமான ரோஸ் என்றால் பெண்களுக்கு பிடிக்கும். டான்சிங் ரோஸ் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் என்ற வசனத்திற்கு ஏற்றாற்போல, அனைவருக்கும் பிடித்தவராக எதிரணியினரே பாராட்டும் திறமையான வீரராகவே வலம் வந்தார்.
தனது திறமையான ஆட்டத்தாலும், வித்தியாசமான உடல் அசைவுகளாலும் குத்துச்சண்டை உலகின் ரியல் டான்சிங் ரோசாக திகழ்ந்த நசீம்ஹமீது சொந்த வாழ்க்கையில் ஏராளமான சிக்கல்களை எதிர்கொண்டார். பல முறை அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.