Actor Vadivelu: நடிகர் வடிவேலுக்கு மிகவும் பிடித்த உணவுகள் என்னென்ன தெரியுமா? - அவரே சொன்ன தகவல்
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் வடிவேலு தனக்கு மிகவும் பிடித்த உணவுகள் குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் வடிவேலு தனக்கு மிகவும் பிடித்த உணவுகள் குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
1991 ஆம் ஆண்டு என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் வடிவேலு. தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், அர்ஜூன், விஜய், அஜித், விக்ரம், ஜெயம் ரவி, சிலம்பரசன் என தமிழில் அவர் நடிக்காத ஹீரோக்களின் படங்களே இல்லை என்னும் அளவுக்கு முன்னணி நடிகர் தொடங்கி அறிமுக நடிகர் வரை அனைவரது படங்களில் நடித்துள்ளார்.
‘வைகைப்புயல்’ என கொண்டாடப்படும் அளவுக்கு காமெடி காட்சிகளில் பின்னி பெடலெடுத்தார். இடையில் சில காலம் வடிவேலு நடிக்காத நிலையில், அவரின் காமெடிகள் இல்லாமல் ஒரு நாளும் நகராது என்னும் நிலையை ஏற்படுத்தியிருந்தார். காமெடி நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், ஹீரோ என தனது கேரியரை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றார்.
மீண்டும் முழு வீச்சில் படத்தில் நடிக்க தொடங்கிய வடிவேலு அடுத்ததாக மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் கதையே வடிவேலுவை சுற்றித் தான் அமைக்கப்பட்டுள்ளது. அவரின் நடிப்புக்கு நிச்சயம் விருது கிடைக்கலாம் என கூறப்படுகிறது. மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால் என பலரும் நடித்துள்ளனர். இந்த படம் நாளை (ஜூன் 29) தியேட்டர்களில் வெளியாகிறது.
இந்த படம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், நடிகர் வடிவேலுவிடம் ரசிகர் ஒருவர், ‘நீங்கள் உணவை வைத்து நிறைய காமெடி காட்சிகளில் நடித்தீர்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த உணவு எது?’ என கேட்டார்.
அதற்கு, “எனக்கு மீன் ரொம்ப பிடிக்கும். இட்லி, புதினா சட்னி, தோசை, கீரை, வாழைத்தண்டு, குழைந்த சாதம், முள்ளங்கி சம்பார் என இவற்றையெல்லாம் விரும்பி சாப்பிடுவேன். எண்ணெய் இல்லாமல் சாப்பிடுவேன்.ஒருவேளை எண்ணெயில் செய்ய வேண்டியதாக இருக்கும் என்றால் ஃபில்டர் பண்ணி விட்டு எடுத்துக் கொள்வேன். மீனில் குழம்பு மீன் ரொம்ப நல்லது. அதை சாப்பிட்டால் தான் எனக்கு சீன் நிறைய வரும்” என வடிவேலு தெரிவித்திருந்தார்.