Ticket Booking: தீபாவளி படங்கள் பார்க்க ரெடியா? .. ஜப்பான், ஜிகர்தண்டா-2 டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!
தீபாவளி வெளியீடாக வரும் ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா 2 படத்துக்கான டிக்கெட் முன்பதிவானது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தீபாவளி வெளியீடாக வரும் ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா 2 படத்துக்கான டிக்கெட் முன்பதிவானது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தீபாவளி பண்டிகை
இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிக்கு ஒன்னும் 3 தினங்களே உள்ளது. நடப்பாண்டில் நவம்பர் 12 ஆம் தேதி இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே புத்தாடைகளும், பட்டாசுகளும் தான் நம் அனைவருக்கும் நியாபகம் வரும். பண்டிகை நெருங்கி விட்டதால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் சினிமா ரசிகர்கள் தீபாவளிக்கு வெளியாகும் படங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 2010 ஆம் ஆண்டுக்கு பண்டிகை நாட்களில் குறைந்தது 4 படங்களாவது களம் கண்டு ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்.
ஆனால் கடந்த 13 ஆண்டுகளில் இதெல்லாம் சுத்தமாக குறைந்து விட்டது. ஒன்று அல்லது இரண்டு படங்கள் மட்டுமே ஒட்டுமொத்த தியேட்டர்களிலும் திரையிடப்படுவதால் பொதுமக்களும் வேறு வழியின்றி படம் நன்றாக இல்லையென்றாலும் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இப்படியான நிலையில் வரும் தீபாவளிக்கு 2 படங்கள் வெளியாகிறது.
ஜப்பான்
குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் “ஜப்பான்”. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், வாகை சந்திரசேகர், சுனில் வர்மா, விஜய் மில்டன், கே.எஸ்.ரவிகுமார், பவா செல்லத்துரை, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள ஜப்பான் படம் தீபாவளி வெளியீடாக தியேட்டரில் வரும் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் கார்த்தியின் 25வது படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், அம்பிகா, பாபி சிம்ஹா, கருணாகரன், சங்கிலி முருகன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் நடித்த படம் ஜிகர்தண்டா. கேங்ஸ்டர் கதையை மிகவும் சுவாரஸ்யமாக சொன்ன விதத்தில் இப்படம் மற்ற படங்களில் இருந்து தனித்து தெரிந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தின் 2 ஆம் பாகம் 9 ஆண்டுகள் கழித்து உருவாகியுள்ளது.
இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதுவும் நவம்பர் 10 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடங்கியாச்சு முன்பதிவு
இதனிடையே ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. தீபாவளிக்கு பலரும் சொந்த ஊர் திரும்பும் நிலையில் குடும்பத்துடன் படம் பார்ப்பார்கள் என்பதால் சென்னை மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் வசூல் எகிறும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. இந்த 2 படங்கள் மட்டுமல்லாது சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள “டைகர் 3” படமும் தீபாவளி வெளியீடாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.