Vignesh Shivan : வெட்கக்கேடு.. சிவகார்த்திகேயனின் அமரன் படம் பார்த்து பொங்கி எழுந்த விக்னேஷ் சிவன்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தைப் பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன் ராணுவ வீரர்களின் குறைவான சம்பளம் குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்
அமரன்
ராஜ்கமல் தயாரித்து சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. வசூல் ரீதியாக முதல் 3 நாட்களில் உலகளவில் 100 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி உருவாகியுள்ள அமரன் திரைப்படம் பல திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலின் , நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் , பாஜக மாநில தலைவர் அண்ணாமை , ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் அமரன் படத்தைப் பார்த்து படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்கள். தமிழில் மட்டுமில்லாமல் , இந்தி , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் ஆகிய மொழிகளிலும் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. காஷ்மீர் தொடர்பான கதைக்களம் என்பதால் அமரன் படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களிடம் இருந்து கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளது.
அமரன் படம் பற்றி விக்னேஷ் ஷிவன்
அமரன் படத்தை திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் பார்த்தபின் படத்தை பாராட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். " அமரன் தமிழ் சினிமாவில் வெளியான ஒரு சிறந்த படம். சிவகார்த்திகேயனின் கரியர் பெஸ்ட். இந்த படம் எல்லா பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் உடைக்கும். இப்படியான ஒரு படத்தை உருவாக்கியதற்கு படக்குழுவினருக்கு நன்றி' என அவர் தெரிவித்திருந்தார்.
பின் அமரன் படத்தின் ஒரு காட்சியை குறிப்பிட்டு விக்னேஷ் சிவன் இப்படி கூறியுள்ளார் " அமரன் படத்தில் ரொம்ப வலி நிறைந்த காட்சி என்றால் முகுந்த் தனது அப்பாவுடன் வீடு வாங்குவதைப் பற்றி பேசும் காட்சிதான். இந்த நாட்டிற்காக தனது உயிரையே தினம் தினம் கொடுக்க தயாராக இருந்த கேப்டனுக்கு இது தான் நிலை என்றால் அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். ராணுவ வீரர்களின் சம்பளம் 100 மடங்காக அதிகரித்தால் அது பெரிய முன்னெடுப்பாக இருக்கும். இந்த முன்னெடுப்பை தொடங்கி வைக்க நான் என்னால் முடிந்த பங்களிப்பை அளிக்க தயாராக இருக்கிறேன்" என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.