”சின்மயியை மட்டும் தாக்காதீர்கள்; வைரமுத்துவை கேள்வி கேளுங்கள்” : மீ டூ விவகாரத்தில் இயக்குநர் வெற்றிமாறன் பளிச்
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் சின்மயி உள்ளிட்ட பல்வேறு நபர்கள் கொடுத்த புகார்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
பாலியல் வன்முறை தொடர்பான ’மீ டூ’ குற்றச்சாட்டுகள் எழுந்தபோது சினிமாத்துறையில் குறிப்பாக தமிழ் சினிமாத்துறையில் பாடலாசிரியர் வைரமுத்து மீதான பின்னணி பாடகர் சின்மயி உடைய குற்றச்சாட்டு பரபரப்பாக கவனிக்கப்பட்டது. 2018ல் சர்வதேச அளவில் மீ டு விவகாரம் கவனிக்கப்பட்ட சமயத்தில் உள்நாட்டில் சின்மயி முன்வைத்த குற்றசாட்டு பரபரப்பாக கவனிக்கப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் சின்மயி உள்ளிட்ட பல்வேறு நபர்கள் கொடுத்த புகார்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இந்த புகார் வெளிவந்த சமயம் இயக்குநர் வெற்றிமாறனிடம் எடுக்கப்பட்ட பேட்டியில் இதுதொடர்பாகக் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,”எப்போதுமே இதுபோன்ற புகார்களில் பாதிக்கப்பட்டவர்களைதான் நாம் குற்றவாளி ஆக்குகிறோம். அதைத்தவிர்த்து இந்தப் புகார் குறித்து விசாரிக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவரிடம் கேள்வி எழுப்ப வேண்டும். அந்த பெண் ஏன் உடனே வந்து புகார் சொல்லவில்லை எனக் கேட்கிறார்கள். உடனே எப்படிச் சொல்ல முடியும்? தனக்கு நிகழ்ந்ததை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் அதைச் சொல்லுவதற்கான மனப் பக்குவம் வரவேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என்றால் நாளை நம் வீட்டுப் பெண்கள் எப்படி தைரியமாக வந்து புகார் அளிப்பார்கள்? அதைவிடுத்து சின்மயியை மட்டுமே ஏன் தாக்கிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே ஒருவருக்கு வேலை கொடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் ‘நீ இதைச் செய்தால் நான் உனக்கு இதைத் தருவேன்’ எனக் கூறுவதே ஒருவகை வன்முறைதான்” என்று பதில் அளித்துள்ளார்.
இதற்கிடையே, அண்மையில் திருச்சிற்றம்பலம் படம் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிகழ்வில் சிவகார்த்திகேயன் குறித்து தனுஷ் தெரிவித்த விஷயத்தை வெற்றிமாறன் குறிப்பிட்டார். 3 படத்தில் தனுஷின் நண்பர் கேரக்டரில் நடித்த சிவகார்த்திகேயன் அடுத்ததாக தனுஷ் தயாரித்த முதல் படமான எதிர் நீச்சலில் ஹீரோவாக நடித்தார். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச்சட்டை படத்தையும் தனுஷ் தயாரித்தார். இந்த 2 படங்களையும் துரை செந்தில் குமார் இயக்கியிருந்தார். இவர் இயக்குநர் வெற்றிமாறனின் உதவியாளர் ஆவார்.
எதிர் நீச்சல் படத்திற்காக வெற்றிமாறனை சந்தித்த போது தனுஷ் உங்கள் உதவியாளர்கள் யாராவது இருந்தால் காமெடி கதை சொல்ல சொல்லுங்கள் என கேட்டார். நான் ஓ காமெடி கதை நடிக்க போறீங்களா என கேட்டேன். அதற்கு எனக்கு இல்லை. சிவகார்த்திகேயனுக்கு எனத் தெரிவித்தார். மேலும் சிவாவுக்கு பயங்கரமான திறமை இருக்கு.. சூப்பர் ஸ்டார் ஆகுறதுக்கான எல்லா தகுதியும் இருக்கு என தெரிவித்ததாக வெற்றிமாறன் தெரிவித்தார்.