Sundar.c | அன்பே சிவம் படத்தில் பெரிய மிஸ்டேக் செய்த சுந்தர்.சி - காப்பாற்றிய கமல்ஹாசன் !
"கமல் சார் படத்தில் அணிந்திருக்கும் கண்ணாடியை சாதரணமாக அணிந்தாலே தலை சுற்றும் .."
சில திரைப்படங்கள் வெளியான சமயங்களில் குறைவான வரவேற்பை பெற்றாலும் சில காலங்கள் கழித்துதான் அதற்கான அங்கீகாரத்தை பெறும். இது வசூலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை என்றாலும் படைப்பாளிகளுக்கு காலம் கடந்தும் அங்கீகாரத்தை பெற்றுத்தரும் . அப்படியான திரைப்படங்களுள் ஒன்றுதான் ‘அன்பே சிவம் ‘ . கமல்ஹாசன் மிகுந்த அற்பணிப்பு உணர்வுடன் நடித்திருந்த இந்த திரைப்படத்தை சுந்தர். சி இயக்கியிருந்தார். கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான அன்பே சிவம் திரைப்படத்தில் நாயகியாக கிரண் நடிக்க , மாதவன் , நாசன் உள்ளிட்ட நடிகர்கள் படத்திற்கு கூடுதல் வலு சேர்ந்த்திருப்பார்கள் . இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய இயக்குநர் சுந்தர்.சி படத்தில் கதாபாத்திரம் உருவான விதம் குறித்து பேசியுள்ளார்.
இந்த படத்தில் முதல் பகுதியில் துரு துரு இளைஞராக வந்திருக்கும் கமல்ஹாசன் , இரண்டாம் பாதியில் அடையாளமே தெரியாமல் மாறிப்போயிருப்பார். அந்த தோற்றம் குறித்து பேசிய சுந்தர். சி அதற்காக கமல்ஹாசன் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கிறார். இது குறித்து சுந்தர் சி கூறுகையில் ” கமல் சார் படத்தில் அணிந்திருக்கும் கண்ணாடியை சாதரணமாக அணிந்தாலே தலை சுற்றும். அதில் சில விரிசல்களும் இருப்பதால் அதனை சமாளிக்க கூடுதலாக ஓர் லென்ஸ் ஒன்றையும் அணிந்திருந்தார். இதில் கூடுதல் சிரமம் என்னவென்றால் அந்த லென்ஸை போட்டுக்கொண்டு கீழே பார்த்தார் என்றால் அவருக்கு மயக்கமே வந்துவிடும். அதன் பிறகு அவர் காலை நொண்டி நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஷுவை உருவாக்கினோம். ஒன்று பெரியது மற்றொன்று சிறியது. அதை போட்டுக்கொண்டு நடப்பது அவ்வளவு சிரமம்“ என்கிறார் சுந்தர்.சி.
மேலும் பேசிய அவர் “அவர் படும் கஷ்டங்களை எல்லாம் நான் படத்தில் காட்ட விரும்பினேன். அதற்காக ஒரு காட்சி அமைத்தேன். ஆனால் கமல் சார் இது ஏன் என கேட்டார். நீங்க படும் கஷ்டம் ஆடியன்ஸுக்கு புரிய வேண்டாமா சார் என்றபோது, கமல் சார் சிம்பதி என்பது காட்சி ஓட்டத்தில் தானாக வர வேண்டும் நாம் திணிக்கக்கூடாது என்றார். உடனே அதை நீக்கிவிட்டேன்”என்கிறார் சுந்தர்.சி
ஒவ்வொரு படத்திலும் கமல் தனது நடிப்பை வெளிப்படுத்த ஒரு காட்சிகள் அமைக்கப்படும். அப்படியாக அமைக்கப்பட்டதுதான் அன்பே சிவம் படத்தில் வைக்கப்பட்ட சுனாமி காட்சி. கொல்லக்குடி ஸ்ரீனிவாசராவ் மகன் , இயக்குநராக களமிறங்கிய முதல் படம் சமயத்தில் சுனாமி பேரலையால் இழுத்துச்செல்லப்பட்டு வியட்நாமில் இறந்துவிட்டார். அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இயக்குநர்களுக்கான விருதுகள் வழங்கப்படுவது வழக்கம் . அப்படி அன்பே சிவம் திரைப்படம் சமயத்தில் வந்த வந்த விருது விழா அழைப்பிதழை பார்த்த சுந்தர்.சி , அது குறித்து கேட்டறிந்து அன்பே சிவம் திரைப்படத்தில் சுனாமி காட்சிகளை படமாக்கியதாக கூறுகிறார்.
அன்பே சிவம் திரைப்படத்தில் கமலின் இரண்டாம் பகுதி கேரக்டர் மிகுந்த பரிதாபமாக, காமெடியாக இருப்பது போன்று உருவாக்கியிருந்ததாக கூறும் சுந்தர்.சி , ”ஒரு நாள் இரவு கமல் சார் எனக்கு கால் செய்து , சுந்தர் படத்தின் முதல் பாதியில் வரும் கம்யூனிஸ்ட் இளைஞர் வலிமையான கதாபாத்திரம், விபத்தில் பாதிக்கப்பட்டால் உடல் வலிமைதான் குறையுமே தவிர , அவரது மனவலிமை அப்படியேத்தானே இருக்க வேண்டும், பரிதாபமாக மாறிவிடக்கூடாதல்லாவா என கூறினார். அவர் சொல்வது சரியாக இருந்தது.. என் தலையில் ஓங்கி அடித்தது போல இருந்தது. மறுபடியும் மூன்று நாள் இரவு முழுவதும் வேலை செய்து கதாபாத்திரத்தின் தன்மையை மாற்றினேன். இல்லையென்றால் நான் மிகப்பெரிய பிழையை செய்திருப்பேன் “ என்கிறார்.