நாயகனாக களமிறங்கும் இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித்
அட்லீயின் உதவி இயக்குநர் படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாயகனாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் அர்ஜித்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். ஷங்கர் கடந்த 1993 ஆம் ஆண்டு ஜெண்டில்மேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தனது 28 ஆண்டுகால சினிமா பயணத்தில் கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக ஷங்கர் வலம் வருகிறார். தான் சினிமாவில் பெரியளவில் சாதித்திருந்தாலும் ஷங்கரின் குடும்பத்தினர் யாரும் சினிமா பக்கம் வராமலேயே இருந்தனர்.
இந்நிலையில்தான் ஷங்கரின் மகள் அதிதி,முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படத்தில் நடித்து வருகிறார். ஷங்கரின் வாரிசு திரையுலகுக்கு வந்துவிட்டதே என ஆச்சரியப்பட்டு ஓய்வெடுப்பதற்குள் அடுத்த தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கரின் மகனும் திரையுலகில் கால்பதிக்கவுள்ளாராம்.
ஷங்கரின் மகனான் அர்ஜித் ஷங்கர் விரைவில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார் என்றும், இயக்குநர் பாலாஜி சக்திவேல் அவரை இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. தற்போது அட்லீயின் உதவி இயக்குநர் ஷிவா இயக்கும் படத்தில் அர்ஜித் நாயகனாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது.





















