29 Years Of Kadhalan: ஒன்னுமே இல்லாத கதையில் மாஸ் காட்டிய ஷங்கர்... 29 ஆண்டுகளை நிறைவு செய்யும் காதலன்..!
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா, நக்மா . வடிவேலு நடித்த காதலன் திரைப்படம் வெளியாகி 29 ஆண்டுகள் நிறைவடைகின்றன
![29 Years Of Kadhalan: ஒன்னுமே இல்லாத கதையில் மாஸ் காட்டிய ஷங்கர்... 29 ஆண்டுகளை நிறைவு செய்யும் காதலன்..! director shankar directed kadhalan movie completes 29 years 29 Years Of Kadhalan: ஒன்னுமே இல்லாத கதையில் மாஸ் காட்டிய ஷங்கர்... 29 ஆண்டுகளை நிறைவு செய்யும் காதலன்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/17/102fd3cba51f3505b6f358aad3d175671694896499377572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஷங்கர் இயக்கிய காதலன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைகின்றன. பிரபுதேவா, நக்மா, வடிவேலு, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கிரிஷ் கர்னாட், ரகுவரன் நடித்த நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார். ஒரு சாதாரண காதல் கதையை தனது ஸ்டைலில் பிரம்மாண்டமாக ஷங்கர் இயக்கியப் படமே காதலன்.
காதலன்
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பிரபு (பிரபுதேவா) ஆளுநரின் மகளான ஷ்ருதியைக் (நக்மா) காதலிக்கிறார். முதலில் ஷ்ருதியை தன்னை காதலிக்க வைக்கும் போராட்டமாக தொடங்கும் படம் பின் ஷ்ருதியும் பிரபுவும் சேரும் போராட்டம் என இரண்டும் பாகங்களாக கதை பிரிகிறது. கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் பெரிய சுவாரஸ்யங்கள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஏ.ஆர் ரஹ்மானின் பாடல்களைத் தவிர. ஆனால் வெளியான சமயத்தில் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றதற்கான காரணங்களை யூகிக்கலாம்.
முதல் காரணம் என்றால் படத்தின் கதாநாயகன் பிரபு ஒல்லியாக தாடி வைத்துக் கொண்டு ஒரு சாதாரண கல்லூரி மாணவனாக இருக்கும் பிரபு பெரும்பாலான நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களையே பிரதிபலிக்கிறான். தங்களது சமூக பொருளாதார நிலைகளை வைத்து அப்போதைய இளைஞர்கள் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மையில் இருந்துள்ளதை அதே சமயத்தில் வெளியான இன்னும் சிலபடங்களிலும் நாம் பார்க்கலாம்.
பிரபு ஆளுநரின் மகள் மீது காதல் வயப்படும் போது அவனது நண்பர்கள் எல்லாரும் அவனை தடுக்கிறார்கள். அப்போது வடிவேலு “பிரசாந்த், அரவிந்த் சாமி மாதிரி இருந்தா தான் பொண்ணுங்க காதலிப்பாங்க.. இல்ல.. சரக்கு இருக்க எந்த பையனா இருந்தாலும் பொண்ணுங்களுக்கு பிடிக்கும்” என்று சொல்கிறார். இந்த வார்த்தை தான் அன்றைய இளைஞர்களின் தாரக மந்திரம் போல் வேலை செய்திருக்கிறது.
பிரமாண்ட காட்சிகள்
தனது படங்களில் பிரமாண்டமான காட்சியமைப்புகளை ஷங்கர் பிற்காலத்தில் தான் வைக்கத் தொடங்கினார் என்றாலும் ஷங்கரின் தொடக்க காலப் படங்களில் பிரமாண்டம் அவரது கதைக்கு வெளியே இருந்ததில்லை அவரது கதைகளுக்கு உள்ளேயே இருந்திருக்கின்றன. தன்னைவிட பல மடங்கு பணக்காரரான ஒரு பெண்ணை காதலிக்கும் பிரபுவின் சாதனைகள் தான் இந்தப் படத்தில் நமக்கு பிரமாண்டங்களாக தெரிகின்றன. அதிலும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களின் வாழ்க்கையில் இருக்கும் துடிப்பு அழகும் இந்தப் படத்தில் இருக்கிறது.
முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் பிரபு மற்றும் அவனது அப்பாவிற்குமான உறவை குறிப்பிடலாம். தனது மகன் ஒரு பெண்ணை காதலித்து சோகமாக இருக்கிறான் என்று தெரிந்ததும் இருவரும் சேர்ந்து குடிக்கிறார்கள். ஒரு சின்ன ஜாக்கெட் கொக்கிக்காக குப்பை லாரியை அலசுகிறார், ஆளுநரின் பெண்ணாக இருந்தால் என்ன அவளும் பெண் தானே என்று சொல்லக்கூடியவராக இருக்கிறார் பிரபுவின் அப்பாவாக வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அதே நேரத்தில் எல்லா வசதிகளுடன் இருக்கும் ஷ்ருதிக்கும் அவரது அப்பாவிற்குமான உறவு மிக கசப்பானதாகவே இருக்கிறது.
ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்தின் பாடல்கள் முலமாக கலாச்சார ரீதியாக ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. திரையில் பிரபுதேவா காதலன் என்றால் திரைக்கு பின்னால் ரஹ்மான் தான் காதலன். ரகுவரனின் கதாபாத்திரம் படத்திற்கு பெரிய அளவில் தொடர்பில்லாமல் இருந்தாலும் அதை கதைக்குள் எப்படியோ கடைசிவரை கொண்டு வந்து கதைய நகர்த்த பயன்படுத்தியிருந்தார்கள். காதலன் படம் மூலம் ஷங்கர் தன் முயற்சியை வானத்தை நோக்கி ஏணியைப் போடும் கதையாக வெற்றி பெற்றிருந்தார் என்றே சொல்லலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)