”கார்த்திக்கை புரிந்து கொள்வதற்குள் படமே ஓவர் “ - இயக்குநர் செல்வா சுவாரஸ்யம்!
"அந்த சமயத்துல கார்த்திக் சார் ஷூட்டிங் லேட்டா வருவாரு அந்த மாதிரியான செய்திகள் எல்லாம் வந்துட்டு இருந்துச்சு ."
தென்னிந்திய சினிமா கொண்டாடும் நாயகனான அஜித் குமாரை அறிமுகப்படுத்திய பெருமை இயக்குநர் செல்வா அவர்களைத்தான் சேரும் . தமிழ் சினிமாவிற்கு தலைவாசல் என்னும் திரைப்படம் மூலமாக எண்ட்ரி கொடுத்தவர் இயக்குநர் செல்வா. அதன் பிறகு அமராவதி என்னும் படத்தை இயக்கினார். இந்த படத்தில்தான் அஜித் குமார் அறிமுகமானார். இந்த படங்களை தொடர்ந்து கர்ணா , பூவேலி, ஜேம்ஸ் பாண்ட், உன்னருகே நான் இருந்தால் , ஸ்டூடண்ட் நம்பர் 1 , நான் அவனில்லை நேர்த்தியான சில படங்களை இயக்கியிருக்கிறார். பூவேலி திரைப்படம் இயக்குவதற்கு முன்னதாக கார்த்திக்கை வைத்து சிஷ்யா என்னும் திரைப்படத்தை எடுத்திருந்தார் செல்வா. அந்த திரைப்படம் எடுக்கப்பட்ட சமயத்தில் கார்த்திக் ஷூட்டிங்கிற்கு சரியாக வருவதில்லை போன்ற செய்திகள் உலா வந்த சமயம் . இது குறித்து மனம் திறந்திருக்கிறார் இயக்குநர் செல்வா.
“ நான் ஒரு கதை பண்ணேன். அதுக்குள்ள கார்த்திக் சார் ஃபிட்டாயிட்டாரு. ஆனாலும் கார்த்திக் சாருக்கு ஏற்ற படமா என அவரை புரிந்துக்கொள்வதற்குள்ளாகவே படம் முடிந்து விட்டது. படம் முடிந்த பிறகுதான் எனக்கு படத்துல சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கலாமோனு தோணுச்சு.அந்த சமயத்துல கார்த்திக் சார் ஷூட்டிங் லேட்டா வருவாரு அந்த மாதிரியான செய்திகள் எல்லாம் வந்துட்டு இருந்துச்சு . ஆனால் அவர் என்னோட ஷூட்டிங்லாம் சரியாகத்தான் வந்தாரு.. சிஷ்யா படம் நல்ல வரவேற்பை பெறல . அடுத்த படத்துல கார்த்திக் சாருடைய திறமைய நல்லா பயன்படுத்தனும்னுதான் பூவேலி திரைப்படத்தை எடுத்தேன். முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காவிட்டாலும் இரண்டாவது படத்தை எனக்கு கார்த்தி சார் கொடுக்க காரணம் . எங்கள் இருவருக்குமான நட்பும் அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையும்தான். நாங்க சிஷ்யா சமயத்தில் நிறைய படங்களை பற்றியும் , சில காட்சிகள் உருவாகியிருக்கும் விதம் குறித்தும் பேசுவோம். சினிமா பற்றி அதிகமாக பேசியதாலோ என்னவோ எங்களுக்குள் நல்ல நட்பு உருவானது . அதன் அடிப்படையில்தான் பூவேலி திரைப்படம் உருவானது. ” என தெரிவித்துள்ளார் இயக்குநர் செல்வா.
பூவேலி திரைப்படம் 1998 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் . இந்த படம் வாங்கிக் இன் தி கிளவுட் என்னும் ஆங்கில படத்தில் தழுவலில் எடுக்கப்பட்டது. 100 நாட்கள் கடந்தும் திரையரங்குகளில் ஓடிய படங்களுள் ஒன்று.படத்தில் கார்த்தியுடன் அப்பாஸ், கௌசல்யா , ஹீரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் பரத்வாஜ் இசையில் 10 பாடல்கள் இடம்பெற்றிருந்தது .படத்தை பாலச்சந்தரின் கவிதாலயா ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது