Director Saran: "ரீமா சென் டார்ச்சர் தாங்க முடியல" மே மாசம் 98 பாடல் உருவானது இப்படித்தான் - இயக்குனர் சரண் புலம்பல்
Director Saran : 'ஜே ஜே' படத்தில் இடம்பெற்ற மே மாதம் பாடலின் ஷூட்டிங் எடுக்க இயக்குநர் சரண் என்ன சிரமத்தை எதிர்கொண்டார் என்பது குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர் சரண் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜே ஜே'. விளையாட்டுத்தனமான அழகான இந்தக் காதல் படத்தில் நடிகை அமோகா, நடிகை பூஜா, நடிகர் டெல்லி கணேஷ், கலாபவன் மணி, தாமு, சார்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன.
சுவாரஸ்யம் குறையவில்லை :
20 ஆண்டுகளை கடந்த பின்பும் இப்படம் இன்றும் காதலர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு திரைப்படம். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வரையில் ஹீரோவும் ஹீரோயினும் எப்படியாவது ஒன்று சேர்ந்து விட வேண்டும் என பார்வையாளர்களை பதைபதைக்க வைத்தது. முழு படத்தையும் ரொமான்டிக்காக சுவாரஸ்யம் சிறிதும் குறையாமல் ரசிகர்களைக் கவரும் வகையில் திரைக்கதையை அமைத்து இருந்தார் இயக்குநர் சரண்.
பரத்வாஜ் இசை :
இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வெரைட்டி. ‘உன்னை நான்’, ‘உன்னை நினைக்கவே’, ‘காதல் மழையே’ போன்ற பாடல்கள் மெலடி ரகத்தில் நெஞ்சை வருடியது என்றால், அனைவரையும் சீட்டை விட்டு எழுந்து ஆட்டம் போட வைத்தது 'மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே...’ பாடல். நடிகை ரீமா சென் நடித்திருந்த இந்தப் பாடல் இன்று வரை இளைஞர்களின் பேவரைட் பாடல்களில் ஒன்றாக கலக்கி வருகிறது.
இந்தப் பாடலின் ஷூட்டிங் அனுபவம் குறித்து நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டபோது பகிர்ந்து இருந்தார் 'ஜே ஜே' படத்தின் இயக்குநர் சரண்.
"இந்த பாடல் ஷூட்டிங் செய்யும் போது நடிகை ரீமா சென் பெரிய அளவில் எனக்கு டார்ச்சர் கொடுத்தார். ஹிப் ஷாட் வைக்க கூடாது. எல்லாத்துக்கும் ஒரு அளவுகோல் இருக்கு அப்படி இப்படினு நிறைய கிளாஸ் எல்லாம் எடுத்தாங்க. ஒரு மனசே இல்லாமல் அந்தப் பாட்டு முழுக்க பண்ணி கொடுத்தாங்க. அதுக்கு என்ன காரணம் என தெரியல. ஆனா நான் இப்படியெல்லாம் பண்ணமாட்டேன் அப்படினு தெளிவா சொன்னாங்க. நம்ம தேவையில்லாமல் எல்லாம் அப்படி அவங்களை பண்ண வைக்கப் போறது கிடையாது.
ரீமா சென் தலையீடு:
விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் தான் அந்தப் பாடலின் ஷூட்டிங் நடத்தினோம். அங்கு ஷூட்டிங் எடுப்பதற்காக ஸ்பெஷல் அனுமதி எல்லாம் கேட்டு வாங்கினோம். அந்த முழு பாடலையும் ஐந்து நாட்களுக்கு அங்கே ஷூட் செய்தோம். ட்ரெயின் வரும்போது பயணிகளுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக ஷூட்டிங் நிறுத்திவிட்டு தள்ளி நிக்கணும். ட்ரெயின் கிளம்பியதற்கு பிறகு தான் மீண்டும் ஷூட்டிங் எடுக்க முடியும். இப்படி நிறைய சவாலுடன் தான் அந்த பாடலை ஐந்து நாட்களுக்கு அங்கு எடுத்தோம். இது அனைத்திற்கும் மேல் ரீமா சென் உடைய தலையீடு அதிகமாக இருந்தது.
ஒவ்வொரு ஷாட் நடிக்கும் போதும் நான் எதுக்கு இந்த ஷாட் நடிக்கணும். இந்த மூவ்மெண்ட் நான் எதுக்கு பண்ணனும். நான் எதுக்கு அது பண்ணனும் நான் எதுக்கு அப்படி பண்ணனும் என அப்படியே பண்ணிக்கிட்டு இருந்தாங்க" என அந்த பாடல் உருவான விதம் குறித்தும், அதனால் அவர் சந்தித்த இன்னல்கள் குறித்தும் உடைத்து பேசி இருந்தார் இயக்குநர் சரண்.