![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Thalapathy Vijay: விஜய் என்ன சூப்பர் ஸ்டாரா? அந்த கதை உயர்த்திவிட்டது! - பொங்கிய எஸ்.ஏ.சந்திரசேகர்!
இயக்குநர் எழில் விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும் படம் பண்ணுவதற்கு முன் ஒரு கேள்வி கேட்டேன். அதை அவர் தன் படத்தின் மூலம் பதிலாக சொன்னார்.
![Thalapathy Vijay: விஜய் என்ன சூப்பர் ஸ்டாரா? அந்த கதை உயர்த்திவிட்டது! - பொங்கிய எஸ்.ஏ.சந்திரசேகர்! director sa Chandrasekhar teases thalapathy vijay in Desingu Raja 2 motion poster release Thalapathy Vijay: விஜய் என்ன சூப்பர் ஸ்டாரா? அந்த கதை உயர்த்திவிட்டது! - பொங்கிய எஸ்.ஏ.சந்திரசேகர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/28/14e38988dcc1d4f5d99492a381bc84f31706415638901572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சினிமாவுக்கு வருகின்ற இளைஞர்களுக்கு ஒரு பொறுப்புணர்வு உள்ளது. நல்ல விஷயங்களை படமாக எடுக்க வேண்டும் என இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் எழில் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த விமல், இதிலும் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக பூஜிதா பொன்னாடா நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஜனா, ஹர்ஷிதா, சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா என பலரும் நடித்து வருகின்றனர். வித்யாசாகர் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
தேசிங்கு ராஜா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், படம் எடுக்க வரும் இளைய தலைமுறையினருக்கு சில அறிவுரைகள் வழங்கினார். அவர் தன் பேச்சின்போது, “சினிமாவுக்கு வருகின்ற இளைஞர்கள் ஒரு கதையுடன் வாருங்கள். உங்களுக்கென்று ஒரு பொறுப்புணர்ச்சி உள்ளது. ஒரு அப்பாவாக, அண்ணனாக இதனை சொல்லிக்கொள்ளும் தகுதி இருப்பதால் தெரிவிக்கிறேன்.
அந்த காலத்தில் 10 தலையை வெட்டுகிறவர்களை வில்லன் என சொன்னோம். ஆனால் இன்னைக்கு அதே விஷயத்தை ஹீரோவை பண்ண வைக்கிறீர்கள். இது எப்படின்னு எனக்கு புரியவில்லை. இதை எப்படி நாம் சினிமான்னு ஏற்றுக் கொள்கிறோம், கொண்டாடுகிறோம்?. இளைஞர்களுக்கு நீயும் கத்தி எடுத்து 10 பேரை வெட்டுன்னு சொல்ல வருகிறோமா?.
ஏனென்றால் இன்றைய இளைஞர்கள் எல்லாம் ஹீரோ என்ன சட்டை போடுகிறார், ஹேர்ஸ்டைல் பண்ணுகிறார் என்பதை பின்பற்றி அப்படியே செய்கிறார்கள். தயவுசெய்து உங்கள் காலை தொட்டு கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். நல்ல விஷயங்களை படமாக எடுங்கள். இரண்டரை மணி நேர படத்தில் 3 நிமிடங்கள் நல்ல விஷயங்களை சொல்லுங்கள்.
எழிலை பொறுத்த வரை நான் அவரிடம் விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும் படம் பண்ணுவதற்கு முன் ஒரு கேள்வி கேட்டேன். அதை அவர் தன் படத்தின் மூலம் பதிலாக சொன்னார். அந்த படம் வெள்ளி விழா கொண்டாடியது. அப்ப என்ன விஜய் சூப்பர் ஸ்டாரா? இல்லையே. அந்த கதை அவரை தூக்கி விட்டது. துள்ளாத மனமும் துள்ளும் படத்துக்குப் பின் தான் விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகமானார்கள். நான் உண்மையை ஒப்புக் கொள்வதில் தயங்க மாட்டேன்.
அந்த படத்தில் யார் நடித்திருந்தாலும் வெள்ளி விழா கொண்டாடியிருக்கும். களிமண்ணை கூட அழகான சிலையாக மாற்றக்கூடிய சக்தி இயக்குநர்களுக்கு இருக்கிறது. அவர்களிடம் சொல்லிக் கொள்வது என்னவென்றால், ‘உங்கள் கையில் ஒவ்வொரு ஹீரோவும் கிடைக்கும்போது அவர்களை உருவாக்கும் பொறுப்பு உங்களிடம் உள்ளது. அதேசமயம் சமுதாயத்தில் ஒரு பொறுப்புணர்ச்சி உள்ளது” என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ள இணையவாசிகள், ‘உண்மையில் நீங்கள் சொல்வது போல துள்ளாத மனமும் துள்ளும் படம் நல்ல கதை தான். ஆனால் இந்த மாதிரியான படங்கள் மூலமாகத்தான் உங்கள் மகன் விஜய்யின் நடிப்புத்திறமை என்பது வெளிப்பட்டதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். நல்ல கதை அமைந்தாலும், அதில் சரியாக நடிக்க தெரிந்தால் மட்டுமே ரசிகர்கள் பார்ப்பார்கள்’ என கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)