Director Ram: திரைப்பட விழாவில் பங்கேற்பதால் இது சீரியஸ் படம் இல்லை: ஏழு கடல் ஏழு மலை படம் குறித்து இயக்குநர் ராம்!
இயக்குநர் ராம் இயக்கியுள்ள ஏழு கடல் ஏழு மலை படம் இன்று நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
ஏழு கடல் ஏழு மலை படம் முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் படம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
ஏழு கடல் ஏழு மலை
கற்றது தமிழ், தங்கமீன்கள். தரமணி, பேரன்பு உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் ராம். தற்போது அவர் இயக்கியிருக்கும் படம் ’ஏழு கடல் ஏழு மலை’. நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.
ரோட்டர்டாம் திரைப்படம் விழாவில்
#YezhuKadalYezhuMalai Team Present At The World Premiere Today At Rotterdam Under The Big Screen Competition !#DirectorRam ! @NivinOfficial ! @sooriofficial !@yoursanjali ! @sureshkamatchi ! #CineTimee ! pic.twitter.com/rEQfYfJhPa
— Cine Time (@CineTimee) January 31, 2024
முன்னதாக ராம் இயக்கிய பேரன்பு திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு உலகளாவிய ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது ஏழு கடல் ஏழு மலை படமும் நெதர்லாந்தில் வருடந்தோறும் நடக்கும் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் நேற்று திரையிடப்பட்டது. இதனால் படக்குழு முழுவதும் நெதர்லாந்துக்கு கிளம்பிச் சென்றுள்ளார்கள்.
முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்தப் படம் குறித்து படக்குழு ஒரு சிறு வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் இயக்குநர் ராம் “திரைப்பட விழாவில் திரையிடப்படுவதால் இது மிகத் தீவிரமான படம் இல்லை, இது முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியலான படம். படத்தில் நடித்த நிவின் பாலி, அஞ்சலி ஆகியவர்களே அதற்கு சாட்சி. வரும் மார்ச் மாதத்திற்கு பிறகு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும்“ என்று கூறியுள்ளார்.
நிச்சயம் உலகளவில் பாராட்டுக்களை பெறும்
படம் குறித்து நடிகர் சூரி பேசுகையில் “ஏழு கடல் ஏழு மலை படம் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் கலந்துகொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. இந்தத் திரைப்பட விழாவுக்கு நான் வருவது இதுவே முதல் முறை. எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குநர் ராமுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் படத்தைப் பார்த்து நிறைய பேர் பாராட்டினார்கள். சர்வதேச அளவில் தமிழ் படங்களுக்கு ஒரு பெரிய அங்கீகாரம் இருப்பது இங்கு வந்த பிறகு தான் தெரிகிறது. நிச்சயம் இந்தப் படம் உலகம் முழுவதும் பாராட்டுக்களைப் பெறும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.
சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள கருடன் படத்திற்கான டப்பிங் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. பி.எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி படத்திலும் சூரி நடித்துள்ளார்.
மேலும் படிக்க : Pa Ranjith: “நீலம் ப்ரொடக்ஷன்ஸ் படம் என்றாலே சென்சார் போர்டு நெருக்கடி தருகிறார்கள்” - பா.ரஞ்சித் ஆதங்கம்!
STR48: சிம்பு பிறந்தநாள் ஸ்பெஷல் அப்டேட்! எஸ்டிஆர்.48 படம் பற்றி அறிவித்த ராஜ்கமல் நிறுவனம்