Ram Gopal Varma: ரன்பீர் செருப்பு வரை இறங்கிய ராம் கோபால் வர்மா.. அனிமல் படத்துக்கு புகழாரம்!
ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் படத்தைப் புகழ்ந்து தள்ளியுள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.
அனிமல்
ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் திரைப்படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியானது . சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
ஒரு பக்கம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றும் மறுபக்கம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது அனிமல் திரைப்படம். இதுவரை மொத்தம் நான்கு நாட்களில் 400 கோடிகளுக்கும் மேலாக இப்படம் வசூலித்துள்ளது. பாலிவுட் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இப்படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
அனிமல் படத்தை புகழ்ந்த ராம் கோபால் வர்மா
பெண்களை இழிவாக சித்தரிக்கும் வகையிலான காட்சிகள் அனிமல் படத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறி இப்படத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்து வருகின்றன. அதே நேரத்தில் படத்தை பல்வேறு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பாராட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா அனிமல் படத்தை பாராட்டி பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
“அனிமல் வெறும் படமாக மட்டுமில்லாமல் சமூகத்தைப் பற்றிய ஒரு பிரகடனம்” என்று ராம் கோபால் வர்மா கூறியுள்ளார். “நிச்சயமாக இந்தப் படம் தொடர்பாகவும் ரன்பீர் கபூரின் கதாபாத்திரங்கள் தொடர்பாகவும் பல்வேறு விவாதங்கள் நிகழும். அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ஒழுக்கம் சார்ந்த போலித்தன்மைகளை தோலுரிக்கும் வகையிலான ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்” எனவும் அவர் கூறியுள்ளார்.
இப்படத்தில் நடித்த ரன்பீர் கபூரை ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவுடன் ஒப்பிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா. டிகாப்ரியோ நடித்த ‘உல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’ படத்துக்கு நிகரான நடிப்பை இந்தப் படத்தில் அவர் வெளிப்படுத்தி இருப்பதாகப் பாராட்டியுள்ளார். 1913ஆம் ஆண்டு ராஜா ஹரிஷ்சந்திரா இயக்கிய முதல் பேசும் படத்தில் தொடங்கி தற்போது 2023 வரையிலான 110 ஆண்டுகால இந்திய சினிமா வரலாற்றில், ஒரு கதாபாத்திரத்திரத்தை இவ்வளவு உண்மையாக யாரும் சித்தரித்தது இல்லை என்றும் ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.
அனிமல் படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவை தன் பாதங்களை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பும் படியும், கீழ்வரும் காரணங்களுக்காக தான் அவரது காலில் விழ விரும்பிவதாக அவர் பதிவிட்டுள்ளார்.
“1. ஒளிப்பதிவு கேமரா கண்டுபிடிக்கப் பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை இயக்குநர்கள் கடைபிடித்து வந்த அனைத்து ரூல்ஸ்களையும் சிதறடித்து ஒரு படத்தை நீங்கள் இயக்கியிருக்கிறீர்கள்.
2. ஒவ்வொரு சினிமா அலுவலகத்திலும் இனி ஒரு படம் எடுக்க முயற்சிக்கும்போது உங்களுடைய படம் ஒரு ஆவிபோல் அவர்களை சுற்றி உலாவரும்.
3. ஹாலிவுட் இயக்குநர்கள் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் முதல் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் வரை ஒரு விஷயத்தை நம்புகிறார்கள். அதாவது ஒரு காட்சி என்பது பார்வையாளர்களுக்கு சலிப்பூட்டாத வகையில் குறுகிய நேரங்களே இருக்க வேண்டும் என்பது. ஆனால் நீங்கள் உங்கள் படத்தில் காட்சிகளை செதுக்குவதற்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதை நான் மிகவும் ரசித்தேன்.
4. இனி ஒவ்வொரு நடிகரும் இப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை தேடுவார்கள். இதன் விளைவாக திரைக்கதை எழுத்தில் புதுமையான முயற்சிகளை படைப்பாளிகள் மேற்கொள்வார்கள். கதைகளில் உன்மைத் தன்மையை மேம்படுத்தும் கலாச்சார ரீதியிலான மாற்றத்திற்கு இது வழிவகுக்கும்” எனக் கூறியுள்ளார்.
எல்லாவற்றும் மேல் தான் ரன்பீர் கபூர் மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரின் காலணிகளை நக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.