(Source: ECI/ABP News/ABP Majha)
வெற்றி மாறன், பா.ரஞ்சித்தே தமிழ் சினிமா தளர்ச்சிக்கு காரணம் - பிரசாந்த் பட இயக்குனர் குற்றச்சாட்டு
KULANTHAI C/O KAVUNDAMPALAYAM : குழந்தை C/O கவுண்டம்பாளையம் படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் சினிமாவில் இருக்கும் சாதியை பற்றி இயக்குநர் பேரரசு மற்றும் பிரவீன் காந்தி இருவரும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள படம் குழந்தை C/O கவுண்டம்பாளையம். இப்படத்தின் ஆடியோ லான்ச் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் உதயகுமார், கனல்கண்ணன், பேரரசு, பிரவீன் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழ் சினிமாவின் தளர்ச்சி:
அந்த வகையில் மேடையில் பரபரப்பைக் கிளப்பும் வகையில் பேசியிருந்தார் இயக்குநர் பிரவீன் காந்தி. அவர் பேசுகையில் "பா. ரஞ்சித், வெற்றிமாறன் போன்ற சில இயக்குநர்கள் சினிமாவில் வளர்ச்சி கண்ட பிறகு தான் தமிழ் சினிமா தளர்ச்சி அடைந்து விட்டது. சினிமாவில் சாதியைப் பற்றி பேசவே கூடாது. அதுதான் என்னுடைய கொள்கை. சினிமாவில் சாதியைப் பற்றி பேசுபவன் ஒதுக்கப்பட வேண்டியவன்.
கோவையில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற ஒன்று நடைபெற்றது. என்னுடைய சகோதரன், சகோதரி அங்கே சீர்கெட்டு கொண்டு இருக்கிறார்கள் என முதலில் குரல் கொடுத்தவர் ரஞ்சித். அதற்கு பிறகு தான் அது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்பட்டது. எதிர்காலத்தில் என்னுடைய சகோதரன் கெட்டுவிடக் கூடாது என கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்க நான் குரல் கொடுப்பேன் என குரல் கொடுத்தவர். நிச்சயம் ஒரு நல்ல படத்தை கொடுத்து இருப்பார். அது சாதியை சார்ந்த ஒரு படமாக இருந்தாலும் நிச்சயம் அது நல்ல படமாக சமுதாயத்திற்கு கருத்து சொல்ல கூடிய ஒரு படமாக தான் இருக்கும்.
நாடக காதல்:
சினிமாவின் இன்று அனைத்தும் மாற்றப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்று என்ற எண்ணத்தை யார் படமாக எடுக்கிறார்களோ அவர்களை தான் நாம் இனி கொண்டாட வேண்டும். திட்டம் போட்டு நாடகக் காதல் செய்து நாட்டை நாசம் செய்பவர்களை தண்டிக்கும் உரிமை நல்லவர்களுக்கு உண்டு. விழிப்புணர்ச்சியை, மறுமலர்ச்சியை நிச்சயம் ரஞ்சித்தின் இந்தப் படம் கொடுத்து மாபெரும் வெற்றி பெரும்” என வாழ்த்தினார் இயக்குநர் பிரவீன் காந்தி.
கோபம் வர வேண்டும்:
இயக்குநர் பேரரசு பேசுகையில் "நாடகக் காதலில் ஏன் சாதி முத்திரை குத்துகிறீர்கள்? நாடகக் காதல் செய்வதும் ஒன்று தான், ஒரு பெண்ணை ஏமாற்றிக் கற்பழிப்பதும் ஒன்று தான். பெண்களை ஏமாற்றுபவன் எந்த சாதியும் இல்லை அவன் மிருகம். ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து ரஞ்சித் அவருடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். பெண்களை பெற்ற அனைவருக்கும் இந்தக் கோபம் வரவேண்டும். சமூகத்தை சீரழிப்பவன் எல்லாம் இயக்குநராக இருக்க முடியாது. ஒரு இயக்குநர் என்றால் சமூகத்தை சீர்திருத்த வேண்டும். சமூக அக்கறையோடு படங்கள் எடுக்க வேண்டும்.
சிதம்பரம் பிள்ளை, சுவாமிநாதன் ஐயர், முத்துராமலிங்க தேவர் போன்ற பலரின் பெயரில் இருக்கும் சாதியை அழித்து விட்டால் அவர்களின் அடையாளங்கள் அழிந்து போய்விடும். நீங்கள் தான் அதை சாதியாகப் பார்க்கிறீர்கள், எங்களுக்கு அவை வரலாற்றுப் பதிவு. தயவு செய்து அடையாளங்களை சீரழிக்காதீர்கள். சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் சாதி சான்றிதழ்களை முதலில் ஒழியுங்கள்" என மிகவும் ஆக்ரோஷமாக பேசி உள்ளார் இயக்குநர் பேரரசு.