(Source: ECI/ABP News/ABP Majha)
Pa Ranjith: ”இன்னும் 4,5 ஆண்டுகளில் மோசமான இந்தியாவில் இருப்போம்” : இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு
Blue Star Pa Ranjith : ப்ளூ ஸ்டார் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.ரஞ்சித் பங்கேற்றார்.
இன்னும் 5, 10 ஆண்டுகளில் நாம் எவ்வளவு மோசமான ஒரு இந்தியாவில் இருக்கப் போகிறோம் என்ற பயம் இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள படம் “ப்ளூ ஸ்டார்”. இந்த படத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, ப்ரித்வி ராஜன், பகவதி பெருமாள், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ப்ளூ ஸ்டார் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் இப்படம் வரும் ஜனவரி 25 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது.
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இருவரும் திருமணம் செய்த பிறகு, இணைந்து நடித்துள்ள ப்ளூ ஸ்டார் படம் வெளியாக உள்ளது பலருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ப்ளூ ஸ்டார் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படியான நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித், ராமர் கோயில் திறப்பு பற்றி தனது கருத்துகளை தெரிவித்தார். அதில், “ராமர் கோயில் திறப்பு இன்று நடந்து கொண்டிருக்கிறது. அதன் பின்னால் இருக்கும் மத அரசியல் பற்றி எல்லாரும் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஒரு சிக்கலான சூழல் உள்ளது. இன்றைக்கு முக்கியமான நாள். வீட்டில் யாரும் கற்பூரம் ஏற்றவில்லை என்றால் எல்லாரும் தீவிரவாதிகள் தான் எனவும், அந்த அளவிற்கு இன்றைக்கு பயங்கரமாக போய் கொண்டு இருக்கிறது.
தீவிரமான காலகட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 5, 10 ஆண்டுகளில் நாம் எவ்வளவு மோசமான ஒரு இந்தியாவில் இருக்க போகிறோம் என்ற பயம் இருந்து கொண்டிருக்கிறது. இந்த பயமான காலகட்டத்தில் நுழைவதற்கு முன்னர் நம்மை நாம் சரி செய்வதற்கு, நம் மனதை பண்படுத்துவதற்கு, நம மூளையில் ஏற்றி வைத்து இருக்கும் பிற்போக்கு தனத்தையும், மதவாதத்தையும் அழிக்கும் கருவியாக சினிமாவை பயன்படுத்துகிறோம்.
மக்களிடம் எளிதாக சென்றடைய கூடியதுதான் இந்த சினிமா. மக்களிடம் இருக்கும் பிற்போக்குதன்மையை இந்த கலை போக்கிவிடும் என நினைக்கிறோம். நம்பிக்கையுடன் தான் வேலை செய்து வருகிறோம். இந்தியாவை மோசமான காலகட்டத்தில் தள்ளி விடாமல் இருக்க நம்மால் முடிந்ததை இந்தியா முழுக்க செய்வோம்” என்று தெரிவித்துள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் இந்த பேச்சு இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.