Vetrimaaran: வெற்றிமாறன் சிரிப்பால் வெற்றி அடைந்த பா.ரஞ்சித் - இதுவா நடந்தது?
வெற்றிமாறனின் சிரிப்பால் இயக்குனர் பா.ரஞ்சித் வாழ்க்கையில் வெற்றி பெற்றது எப்படி? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா, தங்கலான் என பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படங்களை இயக்கிய பா.ரஞ்சித்தின் முதல் படம் அட்டகத்தி.
அட்டகத்தி:
பெரும்பாலான இளைஞர்களின் காதல் வாழ்க்கையை நகைச்சுவையாக கூறிய அந்த படம் பா.ரஞ்சித்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டிய நிலையில், இந்த படத்தை விநியோகஸ்தர்கள் வாங்கியது எப்படி? என்பதை கீழே காணலாம்.
சிரித்தே வியாபாரத்தை முடித்த வெற்றிமாறன்:
இது குறித்து பிரபல இயக்குனர் ராம் கூறியிருப்பதாவது, "அட்டகத்தி படத்தை யாருமே வாங்கல. ஒரு ஷோ போட்ருக்காங்க விநியோகஸ்தர்களுக்காக. அதில் வெற்றிமாறனையும் அழைத்து உட்கார வைத்தார்கள். வெற்றி மாறன் படம் முழுக்க சிரிச்சுகிட்டே இருக்கவும் விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கிட்டாங்க. அட்டகத்தியை விற்றது அன்று வெற்றிமாறன் சிரித்தது அப்படினு ரஞ்சித் சொன்னாரு. "
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், இதுதொடர்பாக இயக்குனர் வெங்கட்பிரபு கூறியிருப்பதாவது, "வெற்றிமாறன் சிரிச்ச சிரிப்பில் எல்லாம் ஆஃப் ஆகிட்டாங்க. ஞானவேல் சார் படம் பார்ப்பதை விட்டு அவர் சிரிக்குறதை பார்த்துவிட்டு, படம் ஓகே ஹிட்டுதான் போலனு நினைச்சுட்டாரு.வெற்றிமாறன் அவ்வளவு ரசிச்சு பார்த்தாரு. நாங்க அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தோம்." இ்வ்வாறு அவர் கூறினார்.
ப்ளாக்பஸ்டர்:
பா.ரஞ்சித்தின் முதல் படமான அட்டகத்தி படத்தை சிவி குமார் தயாரித்திருந்தார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் வெளியிட்டிருந்தார். இந்த படத்தின் மூலமாக தினேஷ் கதாநாயகனாக பிரபலம் அடைந்தார். இந்த படம் தமிழ்நாடு முழுவதும் வெற்றியடைந்து ரூபாய் 8 கோடிக்கும் மேல் வசூலை குவித்தது.
இந்த படத்தில் தினேஷ், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ், கலையரசன், விஸ்வநாத் என பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. லியோ ஜான்பால் எடிட்டிங் செய்திருப்பார்.
திருப்புமுனை:
ஒரு கலகலப்பான இளைஞனின் காதல், கல்லூரி வாழ்க்கையை மிகவும் கலகலப்பாக சொல்லியிருக்கும் படம் அட்டகத்தி. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படத்திற்கு பிறகு பா.ரஞ்சித், தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா மிகப்பெரிய நட்சத்திரங்களாக உருவெடுத்தனர். இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.





















