Mohan G: படங்களுக்கு முடிந்தவரை தமிழில் பெயர் வையுங்கள்.. இயக்குநர் மோகன் ஜி காட்டம்!
2016 ஆம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அதிரடியாக எண்ட்ரி கொடுத்தவர் மோகன் ஜி.
படங்களுக்கு தமிழ் மொழியை தாண்டி வேறு மொழி பெயர் வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அதிரடியாக எண்ட்ரி கொடுத்தவர் மோகன் ஜி. இவர் இரண்டாவதாக இயக்கிய திரௌபதி படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, சூப்பர்ஹிட்டாகவும் மாறியது. தொடர்ந்து ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களையும் அவர் இயக்கியுள்ளார். மோகன் ஜி மீது சாதிய முத்திரை குத்தப்பட்டாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய சினிமா முயற்சியில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.
இப்படியான நிலையில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மோகன் ஜி தனது வாக்கினை செலுத்தி விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழ் திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “படங்களுக்கு தமிழ் மொழியை தாண்டி வேறு மொழி பெயர் வைப்பதில் எனக்குமே முதலில் உடன்பாடு இல்லை. ஆனால் ஓடிடி தளங்களில் மிகப்பெரிய அளவில் பிசினஸ் போய் கொண்டிருப்பதால் எல்லா மொழிகளிலும் ஒரு படத்துக்கு பல டைட்டில் இருந்தா மக்களிடம் சென்று சேர்வது கடினம். அதேசமயம் ஒரே டைட்டில் இருந்தால் ஈஸியா சென்று விடும்.
அதனால் தான் இயக்குநர்கள் இப்படி ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் முடிவுக்கு வருகிறார்கள். ஆனால் முடிந்த அளவு தமிழில் பெயர் வையுங்கள். புராண பெயர்களை எடுத்தால் இந்தியா முழுக்க அதே பெயர் தான் இருக்கும். என்னுடைய படமான பகாசூரனை எத்தனை மொழிகளில் தேடினால் அதே பெயர் தான் வரும். அப்படி இருக்கையில் வணிக நோக்கம் தான் ஆங்கிலத்தில் பெயர் வைக்க காரணமாக அமைகிறது” என மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள “Good Bad Ugly” என்ற படத்தின் டைட்டில் வெளியானது. அதேபோல் நடிகர் விஜய் நடித்து வரும் படத்துக்கு The Greatest of All Time" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.இப்படி தமிழ் திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பது கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கு முன்னால் இப்படி ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டு வந்தது. ஆனால் தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு அளிக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் எல்லாம் தமிழ்நாடு அரசு தரப்பில் வெளியானபோது குறைந்தது மீண்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Kaaduvetty: எட்டுத்திக்கும் வெற்றி.. காடுவெட்டி படத்தின் 2ஆம் நாள் வசூல் எவ்வளவு?