Mari Selvaraj: நாங்குநேரி சம்பவத்துக்கு மாமன்னன் படம் காரணமா? - மாரி செல்வராஜ் கொடுத்த பளீச் பதில்..!
நாங்குநேரியில் வீடு புகுந்து பள்ளி மாணவன் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு மாமன்னன் படம் தான் காரணம் என விமர்சனம் எழுந்த நிலையில், அதற்கு மாரி செல்வராஜ் பதிலளித்துள்ளார்.
நாங்குநேரியில் வீடு புகுந்து பள்ளி மாணவன் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு மாமன்னன் படம் தான் காரணம் என விமர்சனம் எழுந்த நிலையில், அதற்கு மாரி செல்வராஜ் பதிலளித்துள்ளார்.
மாமன்னன் வெற்றி கொண்டாட்டம்
ர்சிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படம் கடந்த ஜூன் 28 ஆம் தேதி வெளியானது. வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். வட மாவட்ட அரசியலை மையமாக வைத்து வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் மாமன்னன் படத்தை கொண்டாடினர்.
ஆனால் ஓடிடி தளத்தில் படம் வெளியானது எதிர்மறையாக படத்தில் சித்தரிக்கப்பட்ட ஃபஹத் பாசில் கேரக்டரை ஹீரோவாக சிலர் கொண்டாடினர். அவர் வரும் காட்சிகளை வெட்டி ஒட்டி பின்னால் சாதிய பின்னணியை கொண்ட சினிமா பாடல்களை ஒலிக்க விட்டு சமூக வலைத்தளத்தை அலறவைத்தனர். இது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. பலரும் மாரி செல்வராஜ் சொல்ல வந்த நோக்கமே சிதைந்து விட்டதாக வருத்தம் தெரிவித்தனர்.
வெற்றி விழா கொண்டாட்டம்
இப்படியான நிலையில் மாமன்னன் படத்தில் 50வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட நிலையில், நிகழ்ச்சியில் பெரிதும் பேசாமல் சுருக்கமாகவே மாரி செல்வராஜ் பேசினார். அவர் தனது உரையில், ‘உதயநிதி அழைத்து எனது கடைசி படம் என்றார். அவர் எந்த மாதிரி ஆசைப்பாட்டாரோ அதுபோல் எடுத்துக் கொடுத்த எனது படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. நான் என்ன பேசுகிறேன் என்று உதயநிதி பார்த்துக் கொண்டு இருக்கிறார். ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். “நான் பாடிக்கொண்டு இருப்பது பழைய பாடலாக இருக்கலாம் அதை என் வாழ்நாள் முழுவதும் பாடுவேன். என் வயிற்றில் இருந்து குடலை உருவி யாழாக மாற்றி அதை தெருத்தெருவாக மீட்டி வருவேன். உண்மையை கேட்கக் கூடிய காதுகளை நான் தேடிக்கொண்டே இருப்பேன்” என்று பேசினார்.
விமர்சனத்துக்கு பதில்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாரி செல்வராஜ், ‘மாமன்னன் படத்தின் வெற்றி விழா நடந்தது ரொம்ப சந்தோசமாக இருக்குது. அந்த படம் மக்களை போய் சேர வேண்டும் என நினைத்து அது நடந்துவிட்டது. அதற்கு மக்கள் தான் காரணம் என கூறினார்.
அப்போது அவரிடம், ‘நாங்குநேரியில் மாணவர் வீடு புகுந்து வெட்டப்பட்ட சம்பவத்துக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?. மாமன்னன் படம் வந்த பிறகு தான் இப்படி நடக்கிறது. மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்களால் தான் ஜாதி பிரச்சினை வருகிறது என சொல்கிறார்கள்’ என கேட்கப்பட்டது. அதற்கு, நான் ஏற்கனவே சொன்னதுபோல ‘உண்மையை கேட்கக்கூடிய காதுகளை நான் தேடிக்கொண்டிருப்பேன்’ என பதிலளித்தார்.