Mari Selvaraj : “நான் நாடகக்காதல் திருமணம்தான் செய்திருக்கிறேன்; ஆனால்...” - மனைவி குறித்து பேசிய மாரி செல்வராஜ்
சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்வதை நாடக காதல் என்று சொல்லும் தரப்பிற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் கொடுத்த பதில் இதுதான்
வாழை
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை படத்தின் முதல் பாடல் வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மாரி செல்வராஜின் மனைவி திவ்யா செல்வராஜ் நவ்வி ஸ்டுடியோஸ் சார்பாக இப்படத்தை தயாரித்துள்ளார். ஹாட்ஸ்டார் இப்படத்தை வெளியிடுகிறது. முழுமுழுக்க குழந்தைகளை மையப் படுத்தி உருவாகியிருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வாழை படத்தின் முதல் பாடல் வெளியீட்டு பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ் மேடையில் மிகவும் உருக்கமாக பேசினார். தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது மனைவி திவ்யா மாரி செல்வராஜ் பெயரில் இந்த படத்தை தயாரித்துள்ளது குறித்து அவர் பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நான் நாடக காதல் தான் செய்துகொண்டேன்
"இந்த படத்தை என்னுடைய மனைவியான திவ்யா மாரி செல்வராஜ் பெயரில் வெளியிடுகிறேன். நான் ராம் சாரிடம் உதவி இயக்குநராக இருந்தபோது நானும் திவ்யாவும் 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படம் பார்க்க சென்றிருந்தோம். அப்போது தான் தங்கமீன்கள் படமும் வெளியாகி இருந்தது. படம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே ராம் சார் எனக்கு ஃபோன் செய்து ஒரு புத்தகம் வேண்டும் அதை உடனே வாங்கி வரச் சொன்னார். நானும் படத்தில் இருந்து வெளியே வந்து அந்த புத்தகத்தை வாங்கி படித்துவிட்டு திரையரங்க வாசலில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டு இருந்தோம். பொதுவாக உதவி இயக்குநராக இருக்கிறோம் என்றாலே ஏதாவது ஒரு படத்திற்கு ஊரில் இருந்து டிக்கெட் கேட்பார்கள். அதேபோல் தான் திவ்யாவும். நான் வேலை பார்த்தது என்னவோ தங்கமீன்கள் மாதிரியான படங்களில். ஆனால் அவர் எந்திரன் மாதிரியான படத்திற்கு டிக்கெட் கேட்பார். நானும் அடித்து பிடித்து வாங்கிக் கொடுத்து விடுவேன். திவ்யாவின் வீட்டில் இருந்த அனைவரும் ஏதோ ஒரு வகையில் படங்கள் அல்லது கலை வழியான உரையாடக் கூடியவர்களை நிறைய மதிப்பவர்களாக இருந்தார்கள். அது என்னிடம் ஏராளமாக இருந்ததால் நான் அவர்களுக்கு நெருக்கமானவனாக மாறினேன். என் வாழ்க்கையில் நான் மீள முடியாத ஒரு கதை தான் வாழை. அப்படியான ஒரு படத்தை அவள் பேரில் தயாரிப்பது என் குழந்தைகளும் எனக்கு அடுத்து வரக் கூடியவர்கள் என்னை புரிந்துகொள்ள சரியான வழியாக இருக்கும் என்று நம்புகிறேன். சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை நாடகக் காதல் என்று சொல்கிறார்கள். அப்படி பார்த்தால் நாடகக் காதல் செய்த நான் என் மனைவி பேரில் ஒரு படத்தை தயாரித்திருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது" என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.