Mamannan: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் இயக்குநர் மாரி செல்வராஜ் கமலுக்கு எழுதிய கடிதம்.. இணையத்தில் வைரல்
மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசனின் முன்னிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியுள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசனின் முன்னிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் மிகவும் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இத்துடன் நடிகர் கமலுக்கு மாரி செல்வராஜ் எழுதிய பழைய கடிதம் ஒன்றும் தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
மாமன்னன்
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்து சுரேஷ், ஃபஹத் ஃபாசில் ஆகியவர்கள் நடித்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் மாமன்னன். ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த ஜூன் 1 ஆம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார்.
என்னை மனப்பிறழ்வுக்கு உள்ளாக்கியத் திரைப்படம்
நிகழ்வில் பேசிய மாரி செல்வராஜ் கமல்ஹாசனின் தேவர் மகன் தனக்கு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து பேசினார். “தேவர் மகன் மாதிரியான ஒரு படம் அதன் திரைக்கதைக்காகவும் அது படமாக்கப்பட்ட விதத்திற்காகவும் அனைவராலும் பாராட்டப்படுகிறது. ஒரு சினிமா ஒரு சமூகத்தை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதை தேவர்மகன் படத்தைப் பார்த்து தான் புரிந்துகொண்டேன்” எனக் கூறினார் மாரி.
இசக்கி மாமன்னன் ஆகும் கதை
மேலும் “தேவர்மகன் படம் ஏற்படுத்திய வலி, அதிர்வுகள் பாசிட்டிவ் நெகட்டிவ் என எத்தனையோ குழப்பங்கள் எனக்குள் ஏற்பட்டன. தேவர்மகன் திரைப்படத்தைப் பார்த்து நாம் மனப்பிறழ்வில் சுற்றிக்கொண்டிருந்தேன். அந்தப் படத்தில் இசக்கி கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவின் கதாபாத்திரம் தான் மாமன்னன் படத்திற்கான மிகப்பெரிய உந்துதல். இசக்கியின் இடத்தில் என் தந்தை இருந்தால் எப்படி இருக்கும் என்று நான் யோசித்ததுதான் இன்று மாமன்னன் படம். இசக்கி மாமன்னன் ஆனால் எப்படி இருக்கும் என்பதே மாமன்னன் படத்தில் கரு“ என்று கமல் முன்னிலையில் குரல் தழுதழுக்கப் பேசியிருந்தார் மாரி செல்வராஜ்.
மாரி கமல்ஹாசனுக்கு எழுதிய காத்திரமான கடிதம்
இதனிடையே மாரி செல்வராஜ் கமல்ஹாசனுக்கு எழுதிய விமர்சனக் கடிதமும் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
8 வயதில் தனது வீடு தீப்பற்றி எறிந்துகொண்டிருந்தபோது இந்தக் கடிதத்தை தான் கமலுக்கு எழுத நினைத்ததாகவும் ஒடுக்குமுறைகளை சகித்துக்கொள்ள நான் ஒன்றும் எனது அப்பன் செல்வராஜோ தாத்தன் நொண்டிபெருமாளோ இல்லை. மூன்றாம் தலைமுறையினன் நான்” என்று தனது கடிதத்தைத் தொடங்கியுள்ளார் மாரி.
தொடர்ந்து அந்த கடிதத்தில் தேவர்மகன் படத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்திப் பேசிய அவரது படம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதை குறிப்பிடுள்ளார் மாரி செல்வராஜ். போற்றி பாடடி பொண்ணே தேவர் காலடி மண்ணே என்கிற பாடல் தலித் மக்களை எத்தகைய ஒடுக்குமுறைக்கு உள்ளாகியது என்பதை விவரித்துள்ளார் மாரி செல்வராஜ்.
தலித் மக்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வந்துகொண்டிருக்கும் காலக்கட்டத்தில் தேவர் மகன் மாதிரியான ஒரு படத்தை கமல் எடுத்தது பணத்திற்காகவா என்கிற கேள்வியை முன்வைத்துள்ளார் மாரி செல்வராஜ். மேலும் உலகநாயகன் என்று அனைவரும் கொண்டாடும் கமல்ஹாசனின் திரைப்பணிகளில் தனது ஒட்டுமொத்த விமர்சனத்தையும் மிக கடுமையான மொழியில் முன்வைத்துள்ளார் மாரி செல்வராஜ்.