5 Years of CCV: மாஃபியா போரில் மாஸ் காட்டிய மணிரத்னம்.. 5 ஆண்டுகளை நிறைவு செய்த ‘செக்க சிவந்த வானம்’..!
மணிரத்னம் என்னும் வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் போல இந்த படத்தில் முன்னணி நடிகர்கள் பலரும் இணைந்திருந்தனர்.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆக்ஷன் பேக்கேஜ் படமான ‘செக்க சிவந்த வானம்’ இன்றோடு 5 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
ஏகப்பட்ட அக்னி நட்சத்திரங்கள்
மணிரத்னம் என்னும் வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் போல இந்த படத்தில் முன்னணி நடிகர்கள் பலரும் இணைந்திருந்தனர். அரவிந்த்சாமி, ஜோதிகா, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், சிலம்பரசன், விஜய் சேதுபதி, அதிதி ராவ், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, தியாகராஜன், தயானா எரப்பா,மன்சூர் அலிகான் என பலரும் நடித்திருந்தனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த நிலையில் இப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
படத்தின் கதை
மாஃபியாவாக வரும் சேனாபதிக்கு (பிரகாஷ்ராஜ்) வரதராஜ் (அரவிந்த்சாமி), தியாகராஜ் (அருண் விஜய்), கடைக்குட்டி எத்திராஜ் (சிலம்பரசன்). ஒருநாள் சேனாபதியும் அவர் மனைவி லட்சுமியும் (ஜெயசுதா) செல்லும் காரின் மீது வெடிகுண்டு வீசப்படுகிறது. இருவரும் பலத்த காயங்களுடன் உயிர் தப்புகிறார்கள். கொலை முயற்சி செய்தியைக் கேட்டு பதறி அடித்து 3 மகன்களும் ஓடிவருகிறார்கள். இவர்களின் சந்தேகப் பார்வை எதிரியான சின்னப்பதாஸ் (தியாகராஜன்) மீது திரும்புகிறது. அரவிந்த் சாமி நண்பனாக வரும் போலீஸ் அதிகாரி விஜய் சேதுபதி இதில் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க உதவுகிறார்.
ஆனால் பிரகாஷ்ராஜூக்கு தன் 3 மகன்களில் ஒருவர் தான் இதை செய்தது என தெரியும். மனைவி ஜெயசுதாவிடம் இதனை சொல்லும் நிலையில் மரணிக்கிறார். இதனைத் தொடர்ந்து, தந்தையைக் கொலை செய்ய முயற்சி செய்த மகன்யார்?, `அவருக்குப் பின் அடுத்த சேனாபதி யார்?' என்ற இரு கேள்விகளுக்கு படம் விடை சொல்கிறது.
பக்காவாக ஸ்கெட்ச் போட்ட மணிரத்னம்
இவ்வளவு பெரிய நட்சத்திர கூட்டத்தை மிக அழகாக கையாண்டு, 4 ஹீரோக்களுக்கும் சரியான அளவில் ஸ்பேஸ் கொடுத்து திரைக்கதையை எழுதியிருந்தார். இந்த படம் உருவாக ஔரங்கசீப்பின் அரியணைப் போர் தான் தனக்கு உத்வேகம் அளித்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். முதலில் 4 ஹீரோக்கள் கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதி , அரவிந்த் சாமி , ஃபகத் பாசில் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால் துல்கருக்கு பதில் சிலம்பரசனும், ஃபகத் பாசிலுக்கு பதில் அருண் விஜய்யும் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது சிம்பு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடுமையான புகார்கள் வைக்கப்பட்டது. அவருக்கு ரெட் கார்டு கொடுக்கும் நிலையும் ஏற்பட்டது. எதையும் கண்டுக்கொள்ளாமல் ற்ற திரைப்பட தயாரிப்பாளர்களின் எதிர்ப்பையும் மீறி, மணிரத்னம் படத்தில் சிம்பு நடித்தார்.
மனதை வசீகரித்த பாடல்கள்
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்த செக்க சிவந்த வானம் படத்துக்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுத, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தில் இடம் பெற்ற சிட்டுக்குருவி, பூமி பூமி, ஹயாத்தி, செவந்து போச்சு நெஞ்சே உள்ளிட்ட அத்தனை பாடல்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த ரூ.42 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.90 கோடி வரை வசூலைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.