KamalHaasan: கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல்.. இயக்குநர் லிங்குசாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
Kamalhaasan : உத்தமவில்லன் படம் மிகப்பெரிய பொருளாதார சிக்கலுக்கு தள்ளிய படமாகும். இதை குறை சொல்வதற்காக தெரிவிக்கவில்லை.
![KamalHaasan: கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல்.. இயக்குநர் லிங்குசாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! director lingusamy allegation on kamalhaasan for uttama villain movie KamalHaasan: கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல்.. இயக்குநர் லிங்குசாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/18/1cc48ac463f4b00be5cf55dc2f5e3ad11713411821615572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Kamalhaasan : இயக்குநர் லிங்குசாமி, உத்தமவில்லன் படத்துக்காக தனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை என நேர்காணல் ஒன்றில் குற்றம் சாட்டியுள்ளார்.
கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது. ரமேஷ் அரவிந்த் இயக்கிய இப்படத்தில் பூஜா குமார், ஆண்ட்ரியா, ஜெயராம், பார்வதி திருவொத்து, ஊர்வசி, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், மறைந்த இயக்குநர்கள் கே.பாலசந்தர், கே.விஸ்வநாத் என பலரும் நடித்த நிலையில் ஜிப்ரான் இசையமைத்தார். உத்தம வில்லன் படம் படுதோல்வியடைந்தது. இந்நிலையில் உத்தம வில்லன் படத்தை தயாரித்த இயக்குநர் லிங்குசாமி கமல்ஹாசன் மீது பல குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
அதாவது, “உத்தமவில்லன் படம் மிகப்பெரிய பொருளாதார சிக்கலுக்கு தள்ளிய படமாகும். இதை குறை சொல்வதற்காக தெரிவிக்கவில்லை. அதற்காக ரூ.30 கோடியில் கமல் படம் பண்ணி தருவதாக சொல்லியிருந்தார். இதற்காக நாங்கள் எந்த அழுத்தமும் தரவில்லை. அவர் மீது இருக்கும் மரியாதைக்காக நான் அடிக்கடி கேட்பேன். சமீபத்தில் கூட கேட்டதற்கு கண்டிப்பாக படம் பண்ணி தருகிறேன் என கமல் சொன்னார். நாங்கள் விரும்பி தான் கமலுடன் படம் பண்ண சென்றோம். ஆனால் நாங்கள் கேட்டது வேறு, அவர் கொடுத்தது வேறு என்ற கதையாகி விட்டது.
கமலிடம் நாங்கள் தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள் மாதிரி ஒரு படம் வேண்டும் என கேட்டோம். அவரும் ஒரு கதை சொன்னார். சூப்பரான கமர்ஷியல் கதையாக இருந்தது. அண்ணன் - தம்பியை மையப்படுத்திய கதையில் தம்பி கேரக்டரில் சித்தார்த்தை நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்தோம். ஆனால் வாரத்திற்கு ஒருமுறை கதையில் மாற்றம் செய்துக் கொண்டே இருந்தார். அவருடைய சிக்கல் அது. இதற்கு முன்னாடி அதை செய்து வெற்றியும் கண்டுள்ளார்.
இயக்குநராக இருக்கும்போது நான் மட்டுமே போயிருந்தால் வேறு மாதிரி போயிருக்கும். ஆனால் தயாரிப்பாளராக சென்றதால் கமல் அடிக்கடி மாற்றுவது தான் பிரச்சினையாக இருந்தது. த்ரிஷ்யம் படம் பண்ணலாம் என தம்பி சுபாஷ் சந்திரபோஸ் சொன்னார். ஒரு முக்கியமான 2 நடிகர்களின் பெயரை சொல்லி அவர்களே இதை பண்ண மாட்டார்கள் என கமல் மறுத்து விட்டார். தம்பி என்ன இப்படி கேக்குறாரு என சொன்னார்.
நான் கமல் மேல் இருக்கும் மரியாதையால் தம்பியை கொஞ்சம் பொறுமையாக இரு என சொல்லி கட்டுப்படுத்தினேன். அந்த சமயத்தில் நாங்கள் 5 படம் பண்ணிட்டு இருந்தோம். அப்போது தான் உத்தம வில்லன் படம் பண்ணலாம் என கமல் சொன்னார். தம்பி போஸூக்கு சுத்தமாக விருப்பமில்லை. அவன் த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் உரிமையை வாங்க காத்துக்கிட்டு இருந்தான். படத்தை கமலுக்கு போட்டு காட்டிய பிறகும் பண்ணமாட்டேன் என சொல்லி விட்டார். ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் வேறொரு கம்பெனிக்கு த்ரிஷ்யம் படத்தை பாபநாசம் என்ற பெயரில் நடித்து கொடுத்தார்.
உத்தமவில்லன் படம் பண்ணிய பிறகு ஏதாவது பிரச்சினை என்றால் சொல்லுங்கள். நான் சரி செய்கிறேன். இது என்னுடைய கனவுப்படம் என கமல் சொல்ல, நான் துளிகூட உள்ளே வரமாட்டேன் என தெரிவித்தேன். ஆனால் ஃபைனலாக எடிட் செய்த பிறகு மாற்றங்கள் சொல்வோம் என கூறினேன். கமலும் சரி என சொன்னார். கிட்டதட்ட எடிட்டில் மாற்றம் செய்ய சொல்லி ஒரு பெரிய பட்டியலை எடுத்துக் கொண்டு சென்றோம். எல்லாம் சரி என சொல்லி விட்டு கடைசி வரை மாற்றவே இல்லை. எடிட் செய்திருந்தால் உத்தம வில்லன் நன்றாக வந்திருக்கும். மறுநாள் வீட்டில் குஷ்பூ எல்லாரும் உட்கார்ந்து உத்தமவில்லன் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லாரும் ரசிக்கிறாங்க,என்னை நம்புங்க, அப்படியே விடுங்க என கமல் கூறினார்” என்று லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)