பைசன் படத்தில் அது ஒன்னுதான் குறை...அடுத்தமுறை நான் உதவுகிறேன்..பிரபல இந்தி இயக்குநர் கருத்து
மாரி செல்வராஜின் பைசன் படத்தை பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் ஹன்சல் மேத்தா பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சனம் எழுதியுள்ளார்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் , முதலமைச்சர் முக ஸ்டாலின் , இயக்குநர் மணிரத்னம் என பல முக்கிய பிரபலங்கள் பைசன் படத்திற்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்கள். இவர்களுடன் பிரபல இந்தி பட இயக்குநர் ஹன்சன் மேத்தா பைசன் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார்
பைசன் படத்தை பாராட்டிய ஹன்சன் மேத்தா
ஸ்கேம் 1992 உள்ளிட்ட பல வெப் சீரிச் மற்றும் படங்களை இயக்கிய ஹன்சன் மேத்தா பைசன் படத்தைப் பற்றி இப்படி கூறியுள்ளார் " சாதி மற்றும் அடையாளம், வன்முறை மற்றும் பழிவாங்கல், வெறுப்பு மற்றும் பாரபட்சம், அடிமைத்தனம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் ஆழமான வேரூன்றிய மோதல்களை ஆராய ஒரு விளையாட்டு வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் கட்டமைப்பைப் பயன்படுத்தி, மாரி செல்வராஜ் அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிரான மன உறுதியையும் கொண்ட ஒரு சிறந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்
படத்தின் கதையை விட்டு விலகாத ஒளிப்பதிவின் மூலம் கபடி மற்றும் ஆக்ஷன் காட்சிகள் நுட்பமாக உருவாக்கப் பட்டிருக்கின்றன. மாரி செல்வராஜ் நேர்மையுடனும் காத்திரமாகவும் தனது கதையில் குறியீடுகளை பயண்படுத்தி உணர்ச்சிகளை கடத்துகிறார். வன்முறை காட்சிகள் அதிகமிருந்தாலும் மிகைப்படுத்தப்படவில்லை. அது எப்போதும் அந்த தருணத்தின் உணர்ச்சிக்கு இயல்பாகவே உள்ளது. படத்தின் இசை கிளர்ச்சியூட்டும் விதமாக ஆழ்ந்த உணர்ச்சிபூர்வமாக இருந்தது. உள்ளூர் கபடி காட்சிகளும் அவற்றின் இசைப் பயன்பாடும் புத்திசாலித்தனமாக கையாளப்பட்டிருந்தன.
துருவ் விக்ரம் ஒரு மிகபெரிய திறமைசாலி. உடல் ரீதியாக மட்டுமில்லாமல் அந்த கதாபாத்திரத்தில் வலி , கோபம் , பலவீனம் ஆகிய எல்லாவற்றையும் வெளிப்படுத்தி இருக்கிறார். தனது வயதிற்கு மீறி அவர் இதனை சாத்தியப்படுத்தி இருக்கிறார். படம் முழுவதும் நிறைய சிறந்த நடிகர்களை பார்க்க முடிந்தது. அதில் நிறைய பேரை எனக்கு தெரியாது. எனது ஒரே குறை என்னவென்றால், ஒரே மாதிரியான இந்தி கதாபாத்திரங்களும் அவர்களின் மொழியும் தான். அடுத்த முறை, நான் உதவ முன்வருகிறேன்!
இந்த அற்புதமான அனுபவத்தை உருவாக்கியதற்காக அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட், சமீர் நாயர், பா ரஞ்சித், மாரி செல்வராஜ் மற்றும் முழு குழுவினருக்கும் பாராட்டுகள். பைசன் என்பது பெரிய திரைக்காக உருவாக்கப்பட்ட ஒரு படம் - ஒரு மக்கள், ஒரு காலம் மற்றும் ஒரு சமூக-பொருளாதார யதார்த்தத்தை ஒருபோதும் முயற்சி அல்லது பிரசங்கம் செய்யாமல் உள்ளடக்கிய ஒரு காட்சி.





















