Vivek: விவேக்கிற்கு சின்ன கலைவாணர் பட்டம் கிடைக்க காரணமாக சம்பவம்!
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மூலம் தனக்கென தனியிடம் பிடித்தவர்கள் பலர். அதில் குறிப்பிடத்தகுந்தவர் விவேக். ஜனங்களின் கலைஞர், சின்ன கலைவாணர் என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார்.

மறைந்த நடிகர் விவேக், சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்டதன் பின்னணியை நடிகரும், இயக்குநருமான பாரதி கண்ணன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சின்ன கலைவாணர் விவேக்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மூலம் தனக்கென தனியிடம் பிடித்தவர்கள் பலர். அதில் குறிப்பிடத்தகுந்தவர் விவேக். ஜனங்களின் கலைஞர், சின்ன கலைவாணர் என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார். தன்னுடைய நகைச்சுவை மூலம் சமூக கருத்துகளையும் புகுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார். இப்படியான நிலையில் விவேக் 2020ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவர் மறைந்தாலும் தன்னுடைய காமெடி மற்றும் தனித்துவமான நடிப்பின் மூலம் மக்களிடையே இன்றளவும் விவேக் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.
மாற்றம் கண்ட வாழ்க்கை
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் பாரதி கண்ணன், “திருநெல்வேலி படம் பார்த்து விட்டு இயக்குநர் ஏ.எல்.விஜய், அப்படத்தில் நடித்த நடிகர் உதயா ஆகியோரின் அப்பாவான தயாரிப்பாளர் அழகப்பன் கலைஞர் கருணாநிதிக்கு படத்தை போட்டு காட்டினார். அவர் அதனைப் பார்த்து விட்டு அதில் வரும் விவேக் காமெடியை சுட்டிக் காட்டி இவன் என்னய்யா பெரியார் பற்றி பெருசா கதையில சொல்லி இருக்குறீங்களே என பாராட்டினார்.
உடனடியாக திராவிடர் கழகத் தலைவர் கீ.விரமணிக்கு போன் செய்து பெரியார் பற்றி பெருசா சொல்லிருக்காங்கய்யா. அவனுக்கு ஒரு விருது கொடுங்க என கூறினார். அப்படி கலைஞர் கருணாநிதி பரிந்துரை செய்து தான் நடிகர் விவேக்கிற்கு சின்ன கலைவாணர் விருது எனது திருநெல்வேலி படம் மூலம் கிடைத்தது.
ஆயிரம் பெரியார் வந்தாலும் உன்னை திருத்த முடியாது என்பது ஒவ்வொரு காமெடியிலும் எண்ட் பாயிண்ட் ஆக வைக்கப்பட்டது. இதற்கு அடிப்படை நான் எம்.ஆர்.ராதா ரசிகன் என்பதால் அவரின் பாணியில் ஒன்று பண்ண வேண்டும் என்பதற்காக அந்த படத்தில் காமெடி வைக்கப்பட்டது. அதனால் நான் விவேக்கிடம் 3 காமெடி ட்ராக் சொன்னேன்,அவர் 7 காட்சிகள் சொன்னார். எல்லாம் கலந்து தான் காமெடி காட்சி வைத்தோம். அந்த படம் விவேக்கிற்கு மிகப்பெரிய பரிணாமத்தை கொடுத்தது.
திருநெல்வேலி படம்
அருவா வேலு, கண்ணாத்தாள், திருநெல்வேலி, ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி, கரகாட்டக்காரி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் பாரதி கண்ணன். இதில் திருநெல்வேலி படம் 2000ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. இப்படத்தில் பிரபு, ரோஜா, கரண், சித்தாரா, உதயா, விந்தியா, விவேக், மனோரமா, அலெக்ஸ், எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.





















