Vanangaan Trailer : பாலா - அருண் விஜய் கூட்டணியில் உருவான 'வணங்கான்' டிரைலர் இன்று வெளியாகிறது
Vanangaan Trailer : இயக்குநர் பாலாவின் 'வணங்கான்' படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
![Vanangaan Trailer : பாலா - அருண் விஜய் கூட்டணியில் உருவான 'வணங்கான்' டிரைலர் இன்று வெளியாகிறது Director Bala Arun Vijay combo Vanangaan movie trailer to be released this evening official announcement Vanangaan Trailer : பாலா - அருண் விஜய் கூட்டணியில் உருவான 'வணங்கான்' டிரைலர் இன்று வெளியாகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/08/a2a441094f41cf4364cee4b41a4a4a751720428602709572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக கருதப்படும் இயக்குநர் பாலா தன்னுடைய தனித்துவமான படைப்புகளுக்கு பெயர் போனவர். யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ஒரு திரைக்கதையை அமைத்து ஆச்சரியப்படுத்துவது அவரின் தனி சிறப்பு. இந்த தேசிய விருது பெற்ற இயக்குநரின் அடுத்த படைப்பாக தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'வணங்கான்'.
இயக்குநர் பாலா - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாக இருந்த இப்படத்தில் இருந்து ஒரு சில காரணங்களால் நடிகர் சூர்யா விலகி கொண்டதால் அவருக்கு பதிலாக நடிகர் அருண் விஜய்யை வைத்து 'வணங்கான்' படத்தை முடித்துள்ளார் இயக்குநர் பாலா. இப்படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கும் நிலையில் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
நல்ல நடிப்பு திறமை இருந்தும் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் போராடி வரும் நடிகர்களில் ஒருவரான நடிகர் அருண் விஜய்க்கு 'வணங்கான்' திரைப்படம் நல்ல ஒரு திருப்புமுனை படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க அருண் விஜய் ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்க, இயக்குநர் மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானதில் ஒரு கையில் பெரியார் மற்றும் ஒரு கையில் பிள்ளையார் சிலையுடன் ஒரு கிணற்றில் இருந்து பரட்டை தலையுடன் காட்சி அளிக்கும் அருண் விஜய், 'பிதாமகன்' படத்தில் நடிகர் விக்ரமின் சாயலை நினைவு படுத்துகிறார். வசனமே இல்லாமல் வெளியான டீசர் மூலம் கதைக்களத்தை பெரிய அளவில் கணிக்க இயலவில்லை. கன்னியாகுமரி கடலின் பேக் கிரவுண்ட், முரட்டுத்தனமான இறுக்கமான முகத்துடன் ஹீரோ, உலக்கை இசைக்கருவி என பாலாவின் டிரேட் மார்க் முத்திரை டீசரில் பதிந்து இருந்தது.
சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரிக்க சத்ய சூர்யா படத்தொகுப்பு பணிகளையும் குருதேவ் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். வணங்கான் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மற்றும் திருவண்ணாமலை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று முழுமையாக முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையில் 'வணங்கான்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மக்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது டிரைலர் வெளியாக இருப்பது 'வணங்கான்' படத்திற்கு மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பை பல மடங்காக அதிகரித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)