சினிமா குற்றவாளிகளுக்கான இடம் இல்லை...ரெட் ஜெயன்ட் மூவீஸை பிரித்து மேய்ந்த போஸ் வெங்கட்
ரெட் ஜெயன்ட் மூவீஸ் குறித்து நடிகரும் இயக்குநருமான போஸ் வேங்கட் பேசியுள்ள கருத்து ரசிகர்களிடம் பரவலாக கவனம் பெற்றுள்ளது

போஸ் வெங்கட்
திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகருமான போஸ் வெங்கட் பேசும் அரசியல் கருத்துக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டின் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோகஸ்த நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவீஸ் குறித்து அவர் பேசியுள்ள கருத்து பரவலாக கவனம் பெற்றுள்ளது.
ரெட் ஜெயன்ட் மூவீஸ் குறித்து போஸ் வெங்கட்
கங்குவா படத்தின் தோல்வி குறித்து பேசியபோது போஸ் வெங்கட் இப்படி கூறியுள்ளார். " பல கோடி செலவு செய்து ஒரு தயாரிப்பாளர் ஒரு படம் எடுக்கிறார் என்றால் அதை மக்களுக்கு காட்டி அவர்களை டார்ச்சர் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் எடுப்பதில்லை. மக்களுக்கு அந்த படம் பிடிக்க வேண்டும் என்றுதான் எடுக்கிறார்கள். அது சில நேரங்களில் ஓடாமல் போகலாம். அந்த படங்களை விமர்சகர்கள் கடுமையாக விமர்சிப்பதால் 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அடுத்தடுத்து வரக்கூடிய நல்ல படங்கள் வராமல் போகிறது. கன்னடம் , தெலுங்கு மொழிகளில் இருந்து டப்பா உப்மா படங்கள் இங்கு வெளியாகிறது அதையும் நாம் பார்த்து கொண்டாடுகிறோம். இந்த படங்களை பார்த்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தை உருவாக்குகிறார்கள்
இது தான் நல்ல சினிமா என்று உங்களை நம்ப வைக்கிறார்கள். நீங்கள் லிஸ்ட் எடுத்து பார்த்தால் தெரியும் ஒரு வருடத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு படம் என மொத்தம் 12 பெரிய படங்கள் வெளியாகின்றன. இடையிடையில் அத்தி பூத்த மாதிரி நான்கு சின்ன படங்கள் வெளியாகி ஓடுகின்றன. அந்த சின்ன படங்கள் ஓடுவதற்கு பின்னாலும் ஒரு அரசியல் இருக்கிறது. இந்த 12 படங்களை ஒரு கம்பேனி தான் ரிலீஸ் செய்திருக்கிறது. வருடத்தில் 365 நாட்களும் இவர்களுக்கு தான் என்றால் மற்றவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள். 15 லட்சம் பேர் சினிமாவில் இருக்கிறார்கள். இயக்குநராக மட்டுமே 15 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். சினிமாவை ரெண்டு பேர் மட்டுமா ஆள்வீர்கள். நீங்கள் மட்டும்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற சூழலை ஏற்படுத்துவீர்கள் ? ஆந்திராவில் , கன்னடத்தில் இந்த நிலைமை இல்லை. இதே மாதிரி நீங்கள் கோயம்பேடு மார்கெட்டில் கடை போட முடியுமா. அறுத்து தூக்கி போட்டுவிடுவார்கள். சினிமா என்பது ஒரு சுதந்திரமான இடம் . இங்கு மாரியப்பன் ஒரு படம் எடுக்கலாம், முனியப்பன் ஒரு படம் எடுக்கலாம் . எனக்கு தெரிந்த திரையரங்குகளில் என் படத்தை வெளியிடலாம். இந்த உரிமைகள் எல்லாம் போய்விட்டது.
சினிமா என்பது ஒரு சபலை பிள்ளை . இங்கு தான் ரொம்ப எமோஷனலான ஆட்கள் இருப்பார்கள். இது கிரிமினல்ஸ்க்கான இடம் இல்லை. சினிமா வியாபாரத்திற்கான இடம் கிடையாது. சினிமா சுதந்திரமாக அவரவர் கற்பனையை படமாக எடுப்பதற்கான தளம். ஆனால் வியாபாரி ஒருத்தனாக தான் இருக்க வேண்டுமா என்ன ? " என போஸ் வெங்கட் கேள்வி எழுப்பியுள்ளார்

