Dhanush: ”ஒருநாள் கூட நினைத்ததில்லை” ராயன் படத்தில் செல்வராகவன்; எமோஷ்னல் போஸ்ட் போட்ட தனுஷ்
நடிகர் தனுஷ் நடித்து இயக்கியுள்ள ராயன் படத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தன்னுடைய 50வது படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே ப.பாண்டி படத்தை தனுஷ் இயக்கியிருந்ததால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்துள்ளார். இதனிடையே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது மட்டும் இல்லாமல், எதிர்ப்பார்ப்பையும் எகிறச் செய்துள்ளது.
படத்தின் டைட்டில் வெளியிட்ட பின்னர் படத்தில் யார் யார் நடித்துள்ளனர் என்பதை தினமும் ஒரு அப்டேட்டாக படத்தினை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. இப்படியான நிலையில், நேற்று படத்தில் நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று படத்தில் இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் நடித்துள்ளார் என தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக படத்தின் இயக்குநரும் நடிகரும் இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நான் உங்களை ஒருநாளும் இயக்குவேன் என நினைத்ததில்லை சார் எனக் கூறி செல்வராகவனை டேக் செய்துள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் தனது தம்பியை வைத்து, துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன் போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனுஷ்க்கு தனி வரவேற்பையும் எதிர்ப்பார்ப்பையும் அவரது ஆரம்ப காலகட்டத்தில் ஏற்படுத்தியவர். இயக்குநர் செல்வராகவன் இயக்கும் படங்கள் மட்டும் இல்லாமல் அவர் நடிக்கும் படங்கள் மீதும் ரசிகர்களுக்கு தனி எதிர்ப்பார்ப்பு உள்ளது. குறிப்பாக சானி காகிதம் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.
Never thought I’ll direct you someday sir 🙏🙏 @selvaraghavan pic.twitter.com/X1TnkaGqAR
— Dhanush (@dhanushkraja) February 22, 2024
ராயன் படத்தில் செல்வராகவன்
கடந்த டிசம்பர் மாதம் ராயன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தெரிவித்த நிலையில் ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது. ராயன் படத்துக்காக தனுஷ் மொட்டையடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் வன்முறைக்கு படத்தில் பஞ்சம் இருக்காது என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உறுதி செய்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் ராயன் படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா எடிட்டிங் பணியை மேற்கொள்ளும் நிலையில் ராயன் படம் இந்தாண்டே திரைக்கும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்குப் பின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கவுள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார். அதன் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் ராயன் படத்துக்கு தனுஷின் அண்ணனும், இயக்குநருமான செல்வராகவன் கதை எழுதியதாக சொல்லப்பட்டது. ஆனால் அதனை அவர் மறுத்திருந்தார்.