HBD Dhanush: ஆழம் தெரியாமல் காலைவிட்டவரா தனுஷ்? பர்த்டே ஹீரோவுக்கு ஒரு ஸ்பெஷல் ரவுண்ட்-அப்
Dhanush: நடிகர் தனுஷ் தனது 38-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவரது கெரியர் பெஸ்ட் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Dhanush: நடிகர் தனுஷ் தனது 38வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவரது கெரியர் பெஸ்ட் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற சொல்லுக்கு சினிமா தொழில் முக்கியமான எடுத்துக்காட்டு. செதுக்கி வைத்த முகவெட்டும், நன்கு வலுவான உடலும் தான் தமிழ் சினிமாவின் கதநாயகர்களாக வலம் வருவதற்கான தகுதிகளாக இருந்தது. ஆனால் சினிமாவில் ஒரு நடிகனாக வாகை சூட இதெல்லாம் தேவை இல்லை என்பதை நடிகர் நாகேஷுக்குப் பின் உணர்த்திய கலைமகன் தான் நடிகர் தனுஷ். வரலாறு எப்போது ஒரு நேர்கோட்டில் செல்வதே இல்லை. அது ஒரு வட்டப்பாதையில் தான் சுழல்கிறது என்பதை நாம் தான் உணர மறுக்கிறோம்.
பெரும் கனவுகளை தன்னுள் கொண்டு தனுஷ் களமிறங்கிய நேரத்தில், ஒட்டுமொத்த சினிமா வட்டாரமே தனுஷின் உருவத்தினை வைத்து கேலி செய்தனர். ஆனால் தனக்குள் இருந்த அசாத்திய நடிப்பினை தனுஷ் வெளிப்படுத்த தொடங்கியபோது கிண்டல் செய்த சினிமாகாரர்கள் வாயடைத்துப் போனார்கள். ஒரு நொடியில் மாறும் உலகில், தனுஷ் தனது நடிப்பின் மூலம் மாற்றிக்காட்ட சிலகாலம் எடுத்தது. அடி மீது அடி வாங்கி தன்னை வலுப்படுத்திக் கொண்ட நடிகர் தனுஷ், சினிமாவில் நடைபோடுவது எல்லாம் நமக்கு செட் ஆகாது என மின்னல் வேகத்தில் ஓட ஆரம்பித்தார்.
சமகால முன்னனி கதாநாயகர்கள் எல்லாம் மாநில அரசின் விருதுகளுக்கே தடுமாறிக் கொண்டு இருக்க, தேசிய விருதுகளை வேட்டையாடி வருகிறார் இந்த அசுரன். ஒரு நடிகரின் வாழ்வில் இயக்குநர்கள் மிக முக்கியமானவர்கள், தனுஷின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களை கொடுத்தது, செல்வராகவனும் வெற்றிமாறனும்தான். இவர்களின் படங்களில் தனுஷ் ஏற்று நடித்த படங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தனுஷின் அறிமுகப் படம். கதையும் கதாப்பாத்திரமும் சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டாலும், தனுஷின் உருவம் குறித்த கேலி கிண்டல்களும் இருந்தன. விளையும் பயிர் முளையில் தெரியும் என்பதை தமிழ் சினிமாவாசிகளுக்கு யாருமே சொல்லித்தரமல் போனது வருத்ததிற்குரிய விஷயம்தான். மீண்டும் தனது அண்ணன் செல்வராகவனுடன் பணியாற்றினார். செல்வாவின் பாணியில்தான் காதல் கொண்டேன் படம் நகர்ந்தது என்றாலும், தனுஷின் அசாத்திய நடிப்பினை திரையுலகம் நின்று பார்த்த படம் அது. ஆனாலும் தனுஷ் பற்றிய உருவக்கேலி என்பது தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. தன்மீது வீசப்பட்ட கேலி கிண்டல்களைக் கொண்டு கவச உடை தயாரித்துக் கொண்டது போல், ’சுள்ளான், திருடா திருடி’ திரைப்படங்கள் தனுஷுக்கு என தனி ரசிகர் பட்டாளத்தைனை உருவாக்கியது. குறிப்பாக புதுப்பேட்டைக்கு உள்ள ரசிகர் பட்டாளம் தனுஷின் ரசிகர் பட்டாளம் என்பதை விட தமிழ்ச் சினிமாவின் ரசிகர் பட்டாளம் என்பதை தனுஷ் உணர்ந்து கொண்ட தருணம். கதாநாகனை விட கதைக்குத்தான் முக்கியத்துவம் என்ற நம்பிக்கையினை தனுஷின் மனதில் செல்வராகவன் பதிய வைத்த தருணம்.
சில வெற்றி தோல்விகளை சந்தித்து வந்த தனுஷுக்கு, சூப்பர் ஹிட் கொடுத்த படம் தான், வெற்றிமாறனின் பொல்லாதவன். நமது பக்கத்து வீட்டுப் பையன் போன்ற ஒரு கதாப்பாத்திரத்தினை மிகவும் நேர்த்தியாக நடித்திருப்பார். இந்த படத்தில் இருந்து தான் தென்னிந்தியாவின் பூரூஸ்லீ என அழைக்கப்பட்டார். இதுவும் ஒருவகை உருவத்தை மைய்யப்படுத்திய பெயராக இருந்தாலும் அதற்கொல்லாம் தனுஷ் மயங்கிவிடவில்லை. அவர் தன்னுடைய வேலையில் மிகவும் கவனமாக இருந்தார்.
மீண்டும் வெற்றிமாறன் கூட்டணியில் மதுரையினை மைய்யமாக வைத்து உருவாக்கப்பட்ட ஆடுகளம் படம் தான், ஒட்டுமொத்த இந்திய சினிமாவே தனுஷை உற்றுநோக்கிய படமாக அமைந்தது. அசாத்திய நடிப்பில் ஆடுகளத்தினை அதகளப்படுத்திய தனுஷுக்கு இந்த படத்திற்காக தேசிய விருது அளிக்கப்பட்டது. அடி மீது அடி வைத்து நடந்த கால்கள் ஓட ஆரம்பித்து விட்டதை தமிழ் சினிமாவாசிகள் உணர்ந்து கொண்ட காலமிது. வெற்றிமாறனுடனும் செல்வராகவனுடனும் தொடர்ந்து பணியாற்றி வந்தாலும் தனுஷ் கமெர்ஷியலாகவும் ஹிட் கொடுக்க தவறியதில்லை. யாரடி நீ மோகினி, திருவிளையாடல் ஆரம்பம், படிக்காதவன், 3 போன்ற படங்களிலும் நடித்து ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டே வந்தவண்ணம் இருந்தார்.
இவரது மயக்கம் என்ன மற்றும் வேலையில்லா பட்டதாரி திரைப்படங்கள், தனக்கு ப்ரியப்பட்ட வேலையைத்தான் செய்வேன், அதற்காக எவ்வளவு காலம் எடுத்தாலும், அவமானங்களைச் சந்தித்தாலும் பரவாயில்லை நான் காத்திருக்கவும், அதில் வரும் சவால்களை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறேன் எனும், ஒன்லைனை வேறுவேறு பாணியில் உங்களையும் என்னையும் திரையில் பிரதிபலித்திருப்பார். இப்படியான படங்கள்தான் முன்னனி நடிகர்களின் ரசிகர்களும் தனுஷ் படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வைத்தது.
வடசென்னை, அசுரன் போன்ற படங்களில் தனுஷின் மெனக்கெடல் அவருக்கு தேசிய விருது உட்பட பல விருதுகளை வாரித் தந்தது. இயக்குநர் மாரி செல்வராஜுடன் இணைந்து பணியாற்றிய கர்ணன் திரைப்படம் தனுஷ் திரைவாழ்வில் மைல்கல்லாக அமைந்திருக்கிறது. ஆழம் தெரியாமல் காலை விட்ட தனுஷ் என பலர் பேசியிருக்க, நடிப்பின் ஆழத்தின் எல்லையினை இன்றைக்கு தனுஷ் நிறுவிக்கொண்டு இருக்கிறார். பிறந்தநாள் வாழ்த்துகள் தனுஷ். நீங்கள் நம்பிக்கை ஒளி..