(Source: ECI/ABP News/ABP Majha)
ஐஸ்வர்யா ராய் மகள் உடல்நிலை குறித்து பகிரப்பட்ட போலி தகவல்...அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்
ஆராத்யாவின் உடல்நலம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மோசமாக பகிரப்படும் செய்திகளுக்கு தடை கோரி முன்னதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா பச்சன் இருவரையும் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்பும் யூடியூப் சேனல்கள் உரிய நடவடிக்கை எடுக்கவும் வீடியோக்களை நீக்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலக அழகி பட்டம் வென்றதுடன் பாலிவுட்டில் கோலோச்சி வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 2007ஆம் ஆண்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன், நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகள் ஆராத்யா கடந்த 2011ஆம் ஆண்டு பிறந்த நிலையில் தற்போது 12 வயதாகிறது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே யூ ட்யூப் சேனல்களில் ஆராத்யாவை ட்ரோல் செய்வது, அவரது உடல்நிலை பற்றி பொய்யான பல தகவல்கள் பகிர்வது உள்ளிட்ட செயல்கள் தொடர்ந்து வந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆராத்யா பச்சன் சார்பில் முன்னதாக மனு தொடரப்பட்டது.
ஆராத்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போலவும், உயிரிழந்தது போலவும் பல வீடியோக்கள் பகிரப்பட்டிருந்த நிலையில், ஆராத்யாவின் உடல்நலம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மோசமாக பகிரப்படும் செய்திகளுக்கு தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், தங்கள் புகாரில் பட்டியலிடப்பட்டுள்ள URLகளை செயலிழக்கச் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சுமார் 10 யூட்யூப் சானல்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கூகுள், யூடியூப் சானல்களில் பகிரப்பட்டுள்ள இத்தகைய வீடியோக்களை நீக்கவும், இந்த சேனல்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், "பிரபலங்களின் குழந்தையாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு சாமானியராக இருந்தாலும் சரி, ஒவ்வொரு குழந்தையும் மரியாதையுடன் நடத்தப்படுவதற்கு உரிமை உண்டு. குழந்தையின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை பரப்புவது நிச்சயம் அனுமதிக்கப்படாது" என்றும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.ஹரிசங்கர் மேலும் கூறினார்.
பிரபலங்களின் குழந்தைகள் பற்றி பல யூட்யூப் சானல்களில் தவறான, மோசமான தகவல்கள் பகிரப்பட்டு வந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பாலிவுட் வட்டாரத்தினர் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ப்ரொமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுள்ள வரும் நிலையில், படத்தின் முக்கியப் பாத்திரமான நந்தினி பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த ப்ரொமோஷன் பணிகளில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு விவகாரத்தில் பிஸியானதால் தான் ஐஸ்வர்யாராய் ப்ரொமோஷன் பணிகளில் கலந்துகொள்ளாததாகத் தகவல் வெளியாகியுள்ளது.