Deadpool & Wolverine Trailer: மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸை காப்பாற்றுமா டெட்பூல் & வொல்வரின் - டிரெய்லர் எப்படி இருக்கு?
Deadpool & Wolverine Trailer: மார்வெல் நிறுவனத்தின் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படமான, டெட்பூல் & வொல்வரின் திரைப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Deadpool & Wolverine Trailer: மார்வெல் நிறுவனத்தின் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படமான, டெட்பூல் & வொல்வரின் திரைப்படம் ஜுலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
டெட்பூல் & வொல்வரின்:
ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹுஜ் ஜாக்மேன் நடிப்பில் உருவாகியுள்ள, டெட்பூல் & வொல்வரின் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸின் ஒரு அங்கமாக, நடப்பாண்டில் வெளியாகும் ஒரே திரைப்படம் இதுவாகும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெட்பூல் மூன்றாம் பாகமாக உருவாகியுள்ள, இப்படத்தில் ஹுஜ் ஜாக்மேனின் வொல்வரின் கதாபாத்திரமும் முக்கிய பங்காற்ற உள்ளது. இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதோடு, நடப்பாண்டில் அதிக வசூல் ஈட்டும் படங்களில் கட்டாயம், டெட்பூல் & வொல்வரின் திரைப்படம் இடம்பெறும் என திரைத்துறையை சேர்ந்த வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கதைக்களம் என்ன?
இரண்டம் பாகத்தின் இறுதியில் டெட்பூல் டைம்டிராவல் செய்து, இறந்து போன தனது காதலியான வெனெசாவை காப்பாற்றியதோடு, தனது எக்ஸ்-ஃபோர்ஸ் அணியை சேர்ந்தவர்களையும் காப்பாற்றி இருப்பார். இந்நிலையில், லோகி சீரிஸில் இடம்பெற்ற TVA எனப்படும் டைம் வேரியண்ட் அதாரிட்டி டெட்பூலை கடத்திச் சென்று, டைம் லைனில் ஏற்பட்டுள்ள சில பிரச்னைகளை தீர்க்க உதவ வேண்டும் என கோருகிறது. அதனை தொடர்ந்து, டிஸ்னியின் மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸ் மற்றும் ஃபாக்ஸ் 20-யின் எக்ஸ்மேன் சினிமாடிக் யூனிவெர்ஸையும் இணைக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, டெட்பூல் படங்களுக்கே உரிய ஆர்-ரேடட் ஆக, மூன்றாம் பாகமும் வெளியாகும் என கருதப்படுகிறது. காரணம் அந்த அளவிற்கு டிரெய்லரிலேயே ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வழக்கம்போல, டெட்பூலின் காமெடி கலந்த வசனங்களும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. டிஸ்னி தயாரிப்பில் வெளியாகும் முதல் முழுநீள, ஆர்-ரேடட் திரைப்படமாக டெட்பூல் & வொல்வரின் இருக்கும் என கருதப்படுகிறது.
மீண்டு வருமா மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸ்:
அழிவின் விளிம்பில் உள்ள உலகத்தை அதீத சக்திகளை கொண்ட, சூப்பர் ஹீரோக்களை கொண்டு காப்பாற்றும் கதைக்களத்தை மையமாக கொண்டு டிஸ்னி படங்களை உருவாக்கி வருகிறது. 2008ம் ஆண்டு அயர்ன்மேன் படத்தின் மூலம் தொடங்கிய இந்த சினிமாடிக் யூனிவெர்ஸ், 2019ம் ஆண்டு அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் மூலம் அதன் உச்சத்தை எட்டியது. அந்த படம் உலக அளவில் 2.79 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலாக வாரிக் குவித்தது. அதுவரையில் அந்த சினிமாடிக் யூனிவெர்ஸில் வெளியான பெரும்பாலான படங்கள், வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அதிகளவில் வெற்றி பெற்றன. ஆனால், ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்திற்கு பிறகு, மார்வெலின் எந்தவொரு திரைப்படமும் சொல்லிக்கொள்ளும் அளவிலான வெற்றியை ஈட்டவில்லை. இந்நிலையில் தான், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹுஜ் ஜாக்மேன் எனும் உலக அறிந்த நட்சத்திரங்களால், மிகவும் பிரபலமான டெட்பூல் & வொல்வரின் கதாபாத்திரங்களை மையமாக கொண்டு புதிய படம் உருவாகியுள்ளது. தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள மார்வெல் நிறுவனத்திற்கு டெட்பூல் & வொல்வரின் பெரும் வெற்றியை தரும் என கூறப்படுகிறது. ஜுலை மாதம் 26ம் தேதி வெளியாக உள்ள இப்படம், 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.