Rajarajan : உழைப்பை வாங்கிக்கிட்டு பேமெண்ட் கொடுக்கல: நேர்மை ரொம்ப குறைவு - கேமராமேன் ராஜராஜன்
Rajarajan : ஒளிப்பதிவாளர் ராஜராஜன் தன்னுடைய 25 ஆண்டுகால திரைப்பயணத்தில் சந்தித்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து இருந்தார்.
தமிழ் சினிமாவின் பொற்காலமாக கருதப்பட்ட 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் மிகவும் திறமையான ஒரு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ராஜராஜன். மெல்ல திறந்தது கதவு, பாண்டித்துரை, ராஜாதிராஜா, அம்மன் கோவில் கிழக்காலே, நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தன்னுடைய சிறப்பான பணிக்கு பல விருதுகளை கூட பெற்றவர். ஆனால் இன்று அவர் யார் என்பது கூட பலருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.
25 ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலமான ஒரு ஒளிப்பதிவாளராக இருந்த ராஜராஜன் தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதை சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் மிகுந்த மனவேதனையுடன் பேசி இருந்தார்.
மிக சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநரான ஜாம்பவான் பாலு மகேந்திராவிடம் உதவி ஒளிப்பதிவாளராக இருந்து பின்னர் தனியாக திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் அளவுக்கு உயர்ந்தார். ஏராளமான பட வாய்ப்புகள் இருந்தும் பெரிய அளவில் சம்பளம் டிமாண்ட் செய்யாதவர். அவரின் அனுபவம் குறித்து பேசுகையில் பலரும் உழைப்பை மட்டும் வாங்கிக்கொண்டு அட்வான்ஸ் மட்டுமே கொடுத்துவிட்டு படம் வெற்றி பெற்றதும் செட்டில்மென்ட் செய்கிறேன் என சொல்லி அப்படியே விட்டுவிட்டனர். செய்த வேலைக்கு சம்பளம் தர தெரியாதா? அதை பிச்சை எடுப்பதுபோல கேட்டு தான் பெற வேண்டுமா? என பல சமயம் யோசித்ததில் பலரும் எனக்கு பேமெண்ட் செய்யாமல் ஏமாற்றியுள்ளார். பண கணக்கு வழக்குகளில் கறாராக இல்லாமல் இரவு பகலாக உழைத்ததுதான் காரணம். இதுவரையில் யாருமே முழு செட்டில்மென்ட் செய்ததே இல்லை.
கேமராமேனாகவே என்னுடைய பெரும்பாலான வாழ்க்கையை கழித்ததால் என்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவு செய்ய கூட நேரம் இருக்காது. சினிமாவில் பிஸியாக இருந்ததால் வீட்டுக்கு செல்வதே அரிதாக இருந்தது. அதனால் என்னுடைய பிள்ளைகள் கூட என்னை மூன்றாவது மனுஷன்போல தான் பார்த்தார்கள். வேலை பளு காரணமாக ஒரு சில வார்த்தைகள் அவர்களுடன் பேசினாலும் சிடுசிடுவென தான் இருக்கும். அதனால் என்னுடைய பிள்ளைகள் என்னை விட்டு ஒதுங்கியே இருந்தனர்.
இருப்பினும் அந்த காலகட்டத்தில் நான் பணிபுரிந்த விஜயகாந்த், பிரபு போன்ற நடிகர்களின் நட்பு கிடைத்தது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. வேற்றுமை பாராமல் அனைவருடனும் அன்பாக பழகுவார்கள். அவர்களை போன்ற தங்கமானவர்களை இன்று பார்க்கவே முடியாது. அவர்களுடன் பணியாற்றிய அந்த நினைவுகள்தான் என்னை இன்று வரை வாழவைக்கிறது. இன்றைய திரைத்துறையில் நேர்மை என்பது சற்று குறைவாகவே இருப்பதாக தோன்றுகிறது. எனக்கு இப்போது வாய்ப்புகள் எதுவும் தேவையில்லை. என்னுடைய குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறேன், அதுவே எனக்கு போதுமானது என தன்னுடைய மலரும் நினைவுகளையும், கசப்பான அனுபவங்களையும் பகிர்ந்து இருந்தார் ஒளிப்பதிவாளர் ராஜராஜன்.