Cinema Headlines : கேரள அரசுக்கு 20 லட்சம் கொடுத்த விக்ரம்...கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா டிரைலர்..சினிமா செய்திகள் இன்று
July 31 Cinema Headlines : கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு பாதிப்பிற்கு விக்ரம் நிதியுதவி செய்தது முதல் கீர்த்து சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா படத்தின் டிரைலர் வரை இன்றைய சினிமா செய்திகளைப் பார்க்கலாம்
கேரள அரசுக்கு விக்ரம் நிதியுதவி
வயநாடு நிலச்சரிவில் இதுவரை 200 பேர்கள்வரை உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 200 பேர்களின் நிலை இதுவரை தெரியவில்லை. வயநாட்டின் முண்டகை, மேப்பாடி மற்றும் சூரல்மலை ஆகிய மூன்று இடங்களில் நிலச்சரிவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மேப்பாடி, சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட பல இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.கனமழையுடன் கூடிய நிலச்சரிவால், முண்டக்கை மற்றும் சூரல்மலையை இணைக்கும் பாலமானது அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணியில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. வீடுகள், கடைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் சேறும் சகதியுமாக அப்பகுதி இருக்கிறது. அப்பகுதிகளில்,பலர் சிக்கியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இம்மாபெரும் பேரிடலில் இருந்து மீள கேரள அரசிற்கு பல்வேறு திசைகளில் இருந்து உதவிகள் கிடைத்து வருகின்றன. தமிழ்நாடு அரசு சார்பாக ஐந்து கோடி நிதி இந்த மீட்பு நடவடிக்கைகளுக்கக வழங்கப் பட்டுள்ளது. தற்போது நடிகர் விக்ரம் கேரள அரசுக்கு 20 லட்சம் நிதி வழங்கியுள்ளார். சமீபத்தில் தங்கலான் படத்தின் ப்ரோமோஷன்களுக்காக விக்ரம் கேரளா செனறு வந்தது குறிப்பிடத் தக்கது.
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா
தற்போது ரகு தாத்தா , ரிவால்வர் ரிடா , கன்னிவெடி , பேபி ஜான் உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்து வருகிறார். ஒவ்வொரு படமும் வெவ்வேறு ஜானர்கள். அந்த வகையில் காமெடி டிராமாவாக உருவாகி இருக்கும் படம் தான் ரகு தாத்தா. இப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ரகு தாத்தா படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் , தேவதர்ஷினி , ரவிந்திர விஜய் , ஆனந்த் சாமி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
மகாராஜா படத்திற்கு விஜய் சேதுபதி சம்பளம் வாங்கவில்லை
விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவான மகாராஜா படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. திரையரங்கில் 100 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்த மகாராஜா படம் ஓடிடியில் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மகாராஜா படம் இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாகவும் அதில் ஆமீர் கான் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி மகாராஜா படத்தில் நடிப்பதற்கு நடிகர் விஜய் சேதுபதி ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என தெரியவந்துள்ளது. சுமார் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 100 கோடி வசூல் செய்துள்ள நிலையில் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை விஜய் சேதுபதிக்கு சம்பளமாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் வெளியாகும் படங்கள்
ஜூலை மாதம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஆகஸ்ட் மாதம் எக்கசக்கமான படங்கள் ரிலீஸூக்கு தயாராக உள்ளன. பெரிய பட்ஜெட் முதல் சிறிய பட்ஜெட் வரை எல்லா விதமான படங்களும் ஆக்ஸ்ட் மாதம் வெளியாகின்றன. முதல் வாரத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி மட்டும் திரையரங்கில் 7 படங்கள் வெளியாகின்றன.
விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் , யோகிபாபு நடித்துள்ள போட் , நகுல் நடித்துள்ள வாஸ்கோடகாமா , இளையராஜா இசையமைத்துள்ள ஜமா , பேச்சி , மன்சூர் அலிகானின் மகன் நடித்துள்ள கடமான்பாறை , நண்பன் ஒருவன் வந்த பிறகு உள்ளிட்ட பல்வேறு படங்கள் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகின்றன.