Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரில் சிக்கியுள்ள நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்டுள்ள, தேசிய விருது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Jani Master: பாலியல் புகாரில் சிக்கியுள்ள நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு விடுக்கப்பட்ட, தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான அழைப்பும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து:
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தேசிய திரைப்பட விருதுகள் பிரிவானது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “
தலைப்பு: 2022க்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள்
21.8.24 தேதியிட்ட தேசிய திரைப்பட விருதுகள் குழுவின் கடிதம், 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளுமாறு 12.9.24 அன்று ஸ்ரீ ஷேக் ஜானி பாஷாவிற்கு போக்சோ சட்டத்தின் கீழ் குற்றச் சாட்டுகள் வெளிவருவதற்கு முன்பே வழங்கப்பட்டது.
குற்றச்சாட்டின் தீவிரத்தன்மை மற்றும் விவகாரம் கீழ்த்தரமாக இருப்பதால், திருச்சிற்றம்பலம் படத்திற்காக ஸ்ரீ ஷேக் ஜானி பாஷாவுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய திரைப்பட விருதை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.
எனவே, 8.10.24 அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ள 70வது தேசிய திரைப்பட விருது விழாவிற்காக ஸ்ரீ ஷேக் ஜானி பாஷாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு வாபஸ் பெறப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய விருது நிறுத்தி வைப்பு ஏன்?
திரையில் கவரக்கூடிய மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகும் பல நடன அசைவுகளை அமைத்து, தமிழ் மற்றும் தெலுங்கு மட்டுமின்றி தேசிய அளவில் பிரபலமானவர் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர். தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் அவர் அமைத்த நடனத்திற்காக, அண்மையில் அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் தன்னிடம் பணியாற்றிய பெண் உதவியாளருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜானி மாஸ்டர் மீட்து குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தலைமறைவான அவர் பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டார். பாலியல் துன்புறுத்தலின் போது பாதிக்கப்பட்ட பெண் மைனராக இருந்ததால், ஜானி மாஸ்டர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தான், தனக்கான தேசிய விருதை பெறுவதற்காக ஜாமின் வழங்க வேண்டும் என, அவர் நீதிமன்றத்தை நாடினர். விசாரணையின் முடிவில், டெல்லியில் நடைபெறும் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு அக்டோபர் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜாமீன் ரத்து செய்யப்படுமா?
இந்நிலையில் தான், ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதை, விருதுகள் குழு வாபஸ் பெற்றுள்ளது. இதனால், ஜானி மாஸ்டருக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. போக்சோ வழக்கு காரணமாக பாலியல் துன்புறுத்தல் காரணமாக ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதை வாபஸ் பெறுவதாக கமிட்டி அறிவித்துள்ளது. அதன் மூலம் ஜானி மாஸ்டருக்கு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன், சிறையில் இருந்து வெளிவருவதற்குள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.