Chiranjeevi - Hanuman : ஒவ்வொரு டிக்கெட்டிலும் அஞ்சு ரூபா, ராமர் கோவிலுக்குத்தான்.. முடிவெடுத்த அனுமன் படக்குழு
ஹனுமான் படத்தின் இசைவெளியீட்டில் அனுமன் படக்குழு அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு நிதியுதவி கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
ஒவ்வொரு டிக்கெட் விற்பனையில் இருந்தும் 5 ரூபாயை அயோத்தியில் ராமர் கோயிலுக்கு நன்கொடையாக கொடுப்பதாக அனுமன் படக்குழு அறிவித்துள்ளது.
அனுமன்
இயக்குநர் பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா நடித்துள்ள படம் அனுமன். பிரஷாந்த் வர்மா சினிமேட்டிக் யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகி இருக்கும் அனுமன் படம் வரும் ஜனவர் 12-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வினய் ராய், அம்ரிதா ஐயர், வரலஷ்மி சரத்குமார் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இந்தப் படத்தின் இசைவெளியீடு ஹைதராபாதில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டார்.
ஒரு டிக்கெட்டுக்கு 5 ரூபாய்
அப்போது பேசிய சிரஞ்சீவி இந்த நிகழ்வில் அனுமன் படகுழு ஒரு முக்கியமான அறிவிப்பை தெரிவிக்க இருப்பதாகவும் அவர்கள் சார்பில், தானே அந்த தகவலை சொல்வதாகவும் தெரிவித்தார். அனுமன் படத்தின் ஒவ்வொரு டிக்கெட் விற்பனையில் இருந்தும், 5 ரூபாயை அயோத்தியில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ராமர் கோயிலுக்கு நன்கொடை கொடுப்பதாக படக்குழு முடிவு செய்துள்ளது.
சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் உருவாக்குவதே எனது ஆசை
அனுமன் படம் குறித்து இயக்குநர் பிரஷாந்த் வர்மா தெரிவித்தபோது தனக்கு சின்ன வயதில் இருந்தே சூப்பர் ஹீரோக்களின் மேல் அபரிமிதமான காதல் இருந்ததாகவும். சூப்பர் ஹீரோக்களை வைத்து ஹாலிவுட்டில் எடுக்கப்படும் படங்களைப்போல் இந்தியாவிலும் எடுக்கவேண்டும் என தனது நீண்ட நாள் கனவை வெளிப்படுத்தினார். மேலும் இந்திய கலாச்சாரத்தில் இருக்கும் தொன்மையான மக்களின் கதைகளில் வரும் கதாபாத்திரங்களை வைத்து இந்த சினிமேடிக் யுனிவர்ஸை தான் உருவாக்க திட்டமிட்டிருப்பதாக முன்னதாக கூறியுள்ளார் பிரஷாந்த்.
ராமர் கோயில் கும்பாபிஷேகம்
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர் பதற்றம் நிலவி வந்தது . இப்படியான நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அயோத்தியில் மசூதி இருந்த நிலமானது, ராம் லல்லாவுக்கு சொந்தம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ராமர் கோயிலின் முதற்கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இதற்கிடையே, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22-ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை, பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. மேலும் பல்வேறு பாலிவுட் நடிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் படிக்க ; Golden Globes 2024: கோல்டன் குளோப் விருதுகளை தட்டித் தூக்கிய கிறிஸ்டோபர் நோலனின் “ஓபன்ஹைமர்” படம்.. முழு பட்டியல் உள்ளே..!