Classic Review: காதல் என்ன செய்யும்? பசுவை புலியாக்கும்... கரடையும் வழியாக்கும்... அது தான் ‛சின்னத்தம்பி’!
குஷ்பூவிற்கு வாழ்நாள் சாதனை படம் சின்னத்தம்பி என்றால் மிகையாகாது. சிரித்த முகத்தோடும், மலர்ந்த காதலோடும், பிரிந்த சோகத்தோடும் மிரட்டியிருப்பார்.
90களில் திடீரென சில படங்கள் சூறாவளியாக வந்து, வசூலில் சுழன்று அடித்துச் செல்லும். அந்த வகையில் 1992 ல் பி.வாசு இயக்கத்தில் வெளியான படம், சின்னத்தம்பி.
மூன்று அண்ணன்களின் கறார் வளர்ப்பில் வளரும் தங்கை. ஊருக்கே இளவரசியாக வாழும் அவர் ஒரு கூண்டுப்பறவை. அரண்மனையை விட்டு வெளியே வரமாட்டார். அவருக்கு தேவையான அனைத்தும் வீட்டிற்கு(ஸாரி... அரண்னைக்கு) வரும். அவ்வாறு வரும் ஆண்களில் யாராவது அந்த இளவரசியை நிமிர்ந்து பார்த்தால், அவர்களுக்கு அண்ணன்கள் தரும் தண்டனை, கொடூரமாக இருக்கும்.
அதே ஊரில் ஏழைத் தாயின் மகனாக வலம் வரும் சின்னத்தம்பிக்கு, நல்ல பாட்டு திறமை உண்டு. பெரிய வீட்டில் எந்த நிகழ்ச்சி என்றாலும், சின்னத்தம்பி பாடல் தான். அதை கேட்டு கேட்டே, பெரிய வீட்டு இளவரசிக்கு சின்னதம்பி மீது காதல். காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன? என்கிற அடிப்படை அறிவு கூட தெரியாத அப்பாவி சின்னத்தம்பி, நந்தினி என்கிற அந்த இளவரசியை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து வாழ்வார். தனக்கு திருமணம் நடந்த விவரம் கூட தெரியாமல் வாழும் சின்னத்தம்பிக்கு, அவர் மனைவி மூலம் பிரச்னை வருகிறது.
தாலி கட்டிய விபரம் தெரிந்து, பெரிய வீட்டு அண்ணன்கள் என்ன செய்தார்கள்? சின்னதம்பி-நந்தினி காதல் திருமணம் கைசேர்ந்ததா? என்பது தான் கதை. பி.வாசுவின் நெருக்கமான திரைக்கதையும், இளையராஜாவின் இனிமையான இசையும், கவுண்டமணி-செந்தில் காமெடி கூட்டணியும் , படத்தை மெகா ஹிட் ஆக்கியது. ஒரு கிராமமே ஏழையாக இருக்க, ஒரு குடும்பம் மட்டும் அங்கு அரண்மனை வைத்து ஒட்டுமொத்த கிராமத்தை கட்டுப்படுத்தும் காட்சிகளை பிரமிப்பாக காட்டியிருப்பார்கள்.
குஷ்பூவிற்கு வாழ்நாள் சாதனை படம் சின்னத்தம்பி என்றால் மிகையாகாது. சிரித்த முகத்தோடும், மலர்ந்த காதலோடும், பிரிந்த சோகத்தோடும் மிரட்டியிருப்பார். அப்பாவி காதலனாக பிரபு, வாழ்ந்திருப்பார். இருவரின் ஹெமிஸ்ட்ரியும் நன்காக வேலை செய்திருக்கும். சின்னத்தம்பியின் தாயாக ஆச்சி மனோரமா அசத்தியிருப்பார்.
படம் வெளியான பின், வசூலை மட்டுமல்ல, விருதுகளையும் வாறிக்குவித்த படம்.
சிறந்த திரைப்படம், சிறந்த தமிழ் இயக்குனர் , சிறந்த நடிகை, சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த பின்னணி பாடகர், சிறந்த ஒளிப்பதிவாளர் டி.கே.எஸ்.பாபு என சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளில் 7 விருதுகளை தன் வசமாக்கியது சின்னதம்பி, சிறந்த திரைப்படமாக ப்லிம் பேர் விருதையும் கைப்பற்றியது.
தமிழக அரசு விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி பாடகர், சிறந்த பின்னணி பாடகி, சிறந்த ஒளிப்பதிவாளர் என அத்தனை விருதுகளையும் கைப்பற்றியது சின்னத்தம்பி.
கன்னடத்தில் ராமாச்சாரி, தெலுங்கில் சந்தி, இந்தியின் ஆனாரி என பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது சின்னத்தம்பி. இன்றும் டிவி சேனல்களில் அதிகம் ஒளிபரப்பாகும் படங்களின் பட்டியலை எடுத்தால், அதில் சின்னத்தம்பி கட்டாயம் இருக்கும். நல்ல கமர்ஷியல் படத்திற்கு சரியான உதாரணம், சின்னத்தம்பி!