(Source: ECI/ABP News/ABP Majha)
Crime : கடன் பிரச்சனையில் மாட்டிய தொழிலதிபர்.. சினிமா பாணியில் நடந்த பரபரப்பு.. பதைபதைத்த சுற்றம்..
சென்னையில் ரூபாய் 1 கோடி கடன் பணத்தை வசூல் செய்வதற்காக கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் சில மணி நேரங்களில் மீட்டனர்.
சென்னை. தி.நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் வர்த்தக ரீதியாக ஆரோக்கியராஜ் என்பவரிடம் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆரோக்கியராஜிடம் கடன் வாங்கிய சரவணன் அந்த கடனை திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதுதொடர்பாக, சரவணனை ஆரோக்கியராஜ் தொடர்பு கொண்ட போதும் அவர் முறையாக பதிலளிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், சரவணனிடம் இருந்து தன்னுடைய பணத்தை வசூல் செய்ய ஆரோக்கிராஜ் முடிவு செய்துள்ளார். தி.நகரில் உள்ள ராமசாமி தெருவில் சரவணனின் சகோதரர் குமரன் என்பவரின் வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று மதியம் சரவணன் இருந்துள்ளார். அப்போது, ஆரோக்கியராஜ் சரவணனை பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
அப்போது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ஆரோக்கியராஜ் தனது அடியாட்கள் சிலருடன் இணைந்து சரவணன் வீட்டிற்கு சென்றார். சகோதரர் வீட்டில் இருந்து வந்த சரவணனும் அங்கு வந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் சரவணனை தனது அடியாட்கள் மூலம் ஆரோக்கியராஜ் கடத்தினார். மேலும், இந்த கடத்தல் சம்பவத்தின்போது வீட்டில் இருந்த 2 கார்கள், விலையுயர்ந்த கடிகாரங்கள் மற்றும் தங்க நகைகளையும் ஆரோக்கியராஜ் மற்றும் அவரது கும்பல் அபகரித்தனர்.
மேலும் படிக்க : Crime: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.2 லட்சம் மோசடி... இளைஞர் கைது
இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்த சிலர் இந்த சம்பவத்தை காவல்துறையினரிடம் உடனடியாக தெரிவித்தனர். மேலும், காரின் எண்ணையும் காவல்துறையினருக்கு தெரிவித்தனர். இதையடுத்து, தகவலறிந்த காவல்துறையினர் சுற்றுப்பகுதியில் இருந்த அனைத்து காவல்துறையினருக்கும், சோதனைச்சாவடிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அப்போது, துரைப்பாக்கம் பகுதியில் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்த கடத்தல் காரை மடக்கிப்பிடித்தனர்.
அதேசமயம், சரவணனை கடத்திச்சென்ற காரை போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் மடக்கிப்பிடித்தனர். இதையடுத்து, கடத்தப்பட்ட சரவணனை போலீசார் பத்திரமாக மீட்டனர். மேலும், அவரை கடத்திய ஆரோக்கியராஜ், அப்ரோஸ் மற்றும் அரவிந்த் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தப்பிஓடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். திரைப்படங்களில் வருவது போல பணத்திற்காக கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபரை சில மணி நேரங்களில் மீட்டப்பட்ட போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க : காதலருடன் சேர்ந்து கணவரை கொலை செய்யத் திட்டம்: சிக்கிய மனைவிக்காக போலீசிடம் கெஞ்சிய கணவர்
மேலும் படிக்க : பட்டப் பகலில் போலீசார் முன்னிலையில் போதையில் சண்டை - டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் அச்சம்