காதலருடன் சேர்ந்து கணவரை கொலை செய்யத் திட்டம்: சிக்கிய மனைவிக்காக போலீசிடம் கெஞ்சிய கணவர்
கணவரை கொலை செய்ய காதலுடன் சேர்ந்து கூலிக்கு மனைவி ஆள்வைத்தது அம்பலமாகியுள்ளது. இந்த குற்றத்திற்கான ப்ளானை சினிமாவை மிஞ்சும் பாணியில் நிகழ்த்தியுள்ளார் அப்பெண்.
கணவரை கொலை செய்ய காதலுடன் சேர்ந்து கூலிக்கு மனைவி ஆள்வைத்தது அம்பலமாகியுள்ளது. இந்த குற்றத்திற்கான ப்ளானை சினிமாவை மிஞ்சும் பாணியில் நிகழ்த்தியுள்ளார் அப்பெண். சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் தோடபிட்டரகல்லு பகுதியைச் சேர்ந்தவர் அனுபல்லவி. இவரது தாய் அம்மோஜம்மா. இவர்களுடன் ஹரீஷ், நாகராஜூ, முகிலன் ஆகியோர் இணைந்துதான் இந்த குற்றத்திற்கு திட்டம் தீட்டியுள்ளார்.
சம்பவம் குறித்து போலீஸ் சொன்னது என்ன?
கர்நாடக மாநிலம் தோடபிட்டரகல்லு பகுதியைச் சேர்ந்தவர் அனுபல்லவி. இவரது தாய் அம்மோஜம்மா. அனுபல்லவியின் கணவர் நவீன் குமார். இவர் சொந்தமாக மாவுமில் வைத்துள்ளார். ஆனால் அனுபல்லவிக்கு திருமணத்தைத் தாண்டிய உறவு உண்டு. ஹிமாவந்த் குமார் என்பவருடன் இவருக்குப் பழக்கம் இருந்தது. இந்நிலையில் தான் தனது காதலுடன் வாழ வேண்டும் என்ற ஆசை ஏற்பட்ட அனுபல்லவி கணவர் நவீன் குமார் கதையை முடிக்கத் திட்டமிட்டார்.
இதற்காக அனுபல்லவியும் அவரது காதலர் ஹிமாவந்த் குமாரும் இணைந்து கூலிக்கு ஆள் தேடியுள்ளனர். ஹரீஷ், நாகராஜூ, முகிலன் ஆகிய மூவரிடமும் நவீன் குமாரை கொல்லும்படி கேட்டுள்ளனர். நவீன் உயிருக்கு ரூ.2 லட்சம் விலை பேசப்பட்டது. முன் பணமாக ரூ.90 ஆயிரத்தை கொடுத்துள்ளனர். கொலை முடிந்த பின்னர் ஒரு லட்சத்து பத்தாயிரம் தருவது என்று பேசப்பட்டது.
இந்த திட்டத்தின் படி நவீன் குமார் ஜூலை 23 ஆம் தேதி கடத்தப்பட்டார். அவரை தமிழ்நாட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை கொலை செய்வதற்குப் பதிலாக அவருடன் சேர்ந்து குடி கும்மாளம் என கூத்தடிக்க ஆரம்பித்தனர் ஹரீஷ், நாகராஜூ, முகிலன் ஆகிய மூவர். பின்னர் அவர் மயங்கியவுடன் அவர் மீது கெட்சப்பை ஊற்றி புகைப்படம் எடுத்து அதனை நவீன் குமார் மனைவி அனுபல்லவிக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் படத்தைப் பார்த்து பயந்து போன அனுபல்லவியின் காதலன் ஹிமாவந்த் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடந்தது.
இந்நிலையில் தனது அண்ணனைக் காணவில்லை என்று நவீனின் சகோதரி ஆகஸ்ட் 2 ஆம் தேதி போலீஸில் புகார் கொடுத்தார். இதற்கிடையில் நவீன் தாமாகவே ஆகஸ்ட் 6 ஆம் தேதி வீட்டுக்கு வந்தார்.
அப்போது நவீனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் போலீஸிடம் தன்னை கடத்திய மூவரின் பெயர் ஹரீஷ், நாகராஜூ, முகிலன் என்று கூறினார். மேலும் அவர்கள் தன்னை ஹிமாவந்த் என்பவர் கூறி கடத்தியதாகத் தெரிவித்தனர் என்றும் போலீஸில் கூறினார். போலீஸார் துருவி துருவி நடத்திய விசாரணையில் தான் நவீனின் மனைவி அனுபல்லவியும், அவரது தாய் அம்போஜம்மாவும் சேர்ந்து நவீனை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது. போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அப்போது நவீன் குமார் மனைவி அனுபல்லவியை மட்டும் விட்டுவிடுங்கள். அவரை நான் நேசிக்கிறேன் என்று கதறி அழுதுள்ளார். அது அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.