கனா காண்கிறேன் கண்ணாளனே... கெட்டி மேளம் கொட்ட தயாராக இருக்கும் தமிழ் சினிமா செலிபிரிட்டிகள்!
சீக்கிரமாக கல்யாணம் செய்து கொள்ளப்போகும் திரை பிரபலங்கள் யார் யார்?
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டு ஏராளமான நடிகர் நடிகைகளுக்கு திருமண யோகம் வந்து விட்டது. வரிசையாக கல்யாணம் குறித்த அப்டேட்களை கொடுத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் விரைவில் கெட்டி மேளம் கொட்ட போகும் சில நட்சத்திர ஜோடிகளை பற்றி பார்க்கலாம் :
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் :
ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் ரீல் ஜோடியாக இருந்த அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் விரைவில் ரியல் ஜோடிகளாக போகிறார்கள் என்ற அறிவிப்பை வெயிட்டுள்ளனர். நடிகர் அருண் பாண்டியன் மகளும் நடிகை ரம்யா பாண்டியனின் தங்கையுமான கீர்த்தி பாண்டியன் பல படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அசோக் செல்வன் பல வெற்றி படங்களில் நடித்து இளம் நடிகர்களில் ஒருவராக ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
கவின் - மோனிகா :
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பயணித்து வெற்றி பெற்ற நடிகர்களில் ஒருவரான கவின் தனது நீண்ட நாள் காதலியான மோனிகாவை ஆகஸ்ட் 20ம் திருமணம் செய்து கொள்ள உள்ளார். 2021ல் ஓடிடியில் வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தற்போது 'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு மிகவும் பிஸியான ஒரு நடிகராக மாறிவிட்டார். கவின் திருமணம் செய்துகொள்ள போகும் தோழி மோனிகா ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி :
ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் ஒன்று இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்து பின்னர் நடிப்பதில் இருந்து விலகி கொண்டார். நகைச்சுவை நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக உமாபதி இருந்த போது ஐஸ்வர்யாவுக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. இரண்டு முக்கியமான செலிபிரிட்டிகளின் வாரிசுகள் இந்த திருமணம் மூலம் இணைகிறார்கள்.
வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி :
தெலுங்கு திரையுலகின் மிகவும் பிரபலமான கொனிடேலா குடும்பத்தை சேர்ந்த நாகேந்திரா பாபுவின் மகன் நடிகர் வருண் தேஜ் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தமிழில் பிரம்மன், மாயவன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்கள் மற்றும் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை லாவண்யா திரிபாதி. வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி இருவருக்கும் இடையில் காதல் கிசுகிசு என பேசப்பட்ட நிலையில் இவர்கள் இருவருக்கும் மிகவும் பிரமாண்டமாக ஜூன் 9ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது.