BigBoss Winner Raju : பிக்பாஸ் டைட்டிலை வென்ற ராஜூ பாய்...! இவரை பத்தி தெரியாத சீக்ரெட்ஸ் இதோ..!
பிக்பாஸ் சீசன் 5-ன் போட்டியாளர் ராஜூ டைட்டில் வின்னராகி அசத்தியுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த தொடருக்கு என்று தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனில் ராஜூ வெற்றி பெற்றுள்ளார். தொடக்கம் முதலே அவர்தான் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில், அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் ராஜூ வெற்றி பெற்றுள்ளார்.
நடிகர், திரைக்கதை ஆசிரியர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் என்று பன்முகத்தன்மை கொண்ட ராஜூ பிறந்தது திருநெல்வேலி ஆகும். ஆனால், அவர் வளர்ந்தது அனைத்தும் சென்னை ஆகும். 1991ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி பிறந்த ராஜூ விஸ்காம் ஸ்டூடண்ட் ஆவார். சென்னையில் வளர்ந்த அவர் கோவையில் உள்ள பிரபலமான கல்லூரியில் படித்தார். படிக்கும்போது இருந்தே சினிமா மீது தீராத மோகம் கொண்டவராகவே ராஜூ இருந்தார்.
இயக்கத்தின் மீது அதீத ஆர்வம் கொண்ட ராஜூ படிக்கும்போதே, நண்பர்களை வைத்து குறும்படமும் இயக்கியுள்ளார். படிப்பை முடித்து சென்னை திரும்பிய அவர் நடிப்பில் கவனம் செலுத்தினார். ராஜூ ஜெயமோகன் என்ற இயற்பெயர் கொண்ட ராஜூவிற்கு கனா காணும் காலங்களில் கல்லூரி மாணவனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நாடகத்தில்தான் கவினும் நாயகனாக அறிமுகமாகியிருப்பார். இந்த நாடகத்தில் ரியோ உள்பட சில முக்கிய நடிகர்களும் நடித்திருப்பார்கள்.
பின்னர், கல்லூரி சாலை, ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சில பிரபலமான தொடர்களில் நடித்தார். நடிகராக மெல்ல மெல்ல வளர்ந்து வந்த வேளையில், கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி தாரிகாவை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டின் உள்ளே ஒரு சாதாரண போட்டியாளராக நுழைந்தார் ராஜூ ஜெயமுருகன் என்ற ராஜூ. இந்த சீசன் தொடங்கியது முதல் ராஜூவிற்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகத் தொடங்கினர். அவரது பேச்சும், அவரது யதார்த்தமான செயல்பாடுகளும், சிரிக்க வைக்கும் விதமான அவரது நடவடிக்கைகளும் பலரையும் அவர்பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.
போட்டி தொடங்கியது முதல் கடைசி வரை பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த ராஜூ பிக்பாஸ் சீசன் 5 வின்னராக டைட்டில் வெற்றி பெற்றதற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். ராஜூ விரைவில் இயக்குனராகவும், பெரிய நடிகராகவும் வெள்ளித்திரையில் வெற்றிப்பயணம் வர ரசிகர்களுடன் நமது ஏபிபிநாடு சார்பாகவும் வாழ்த்துவோம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்