Azeem: கமல் சாரால் நான் டைட்டில் வாங்கியதை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா.. அசீம் ஆதங்கம்!
Azeem: பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை அசீம் வென்றதை பற்றி தான் கமல் கடந்த வார நிகழ்ச்சியில் மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார் என எழுந்த சர்ச்சையை தொடர்ந்து அதற்கு அசீம் கருத்து தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்பு இருப்பது வழக்கமான ஒன்றுதான். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீன் 7 நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை எந்த ஒரு இடத்திலும் பரபரப்பு குறையாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் சொல்ல போனால் இந்த சீசன் மிகுந்த சர்ச்சைக்குரிய சீசனாக இருந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த வாரம் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி விவகாரம் இணையத்தில் பேசுபொருளாக இருந்து வருகிறது. பிரதீப் ஆண்டனிக்கு மக்கள் தரப்பில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பேசிய சில வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. "முந்தைய சீசன்களில் சிலர் வென்றார்கள் என்பதற்காக அதே போல விளையாடினால் மக்கள் ஆதரவு கிடைத்துவிடும் என நினைக்கக் கூடாது" என அவர் அசீமை தான் குறிப்பிடுகிறார் என இணையத்தில் சிலர் அதிருப்தியை தெரிவித்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் தனியார் சேனலுக்கு இதுகுறித்து பேட்டியளித்துள்ள அசீம், இது குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில் “கமல் சார் என்னுடைய பெயரை குறிப்பிட்டு சொல்லவில்லை. இதுவரையில் நடைபெற்று முடிந்த ஆறு சீசன்களில் நான் கலந்து கொண்ட ஆறாவது சீசன் குறித்து தான் பெரும் வாக்குவாதம் நடைபெற்று கொண்டு இருக்கிறது.
பிக்பாஸ் டைட்டிலை எனக்கு வழங்கியது மக்கள் தான். இது விஜய் டிவியின் முடிவோ அல்லது கமல்ஹாசனின் தனிப்பட்ட முடிவோ கிடையாது. நூறு நாட்களாக மக்கள் நிகழ்ச்சியை பார்த்த பிறகு அவர்கள் போட்ட வாக்குகள் மூலம் தான் அந்த டைட்டிலை வென்றேன்.
இன்னும் அவரால் நான் டைட்டில் வாங்கியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? அவர் எந்த அர்த்தத்தில் பேசினார் என்பது தெரியவில்லை ஆனால் அது எனக்கு வருத்தமாக இருந்தது. என்னுடைய வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அவர் பிக் பாஸ் ரசிகர்களையும் உதாசீனம் செய்கிறார் என்பது தானே அர்த்தம்.
பிக் பாஸ் சீசன் 6 முடிந்து அடுத்த சீசன் வந்துவிட்டது ஆனாலும் இன்னும் இதே சர்ச்சை ஓடிக்கொண்டே இருக்கிறது. நான் கடந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஸ்ட்ராட்டஜி என்று எதையும் பயன்படுத்தவில்லை. நான் நானாக தான் விளையாடினேன். அதற்கான அங்கீகாரமாக தான் அந்த டைட்டில் எனக்கு கிடைத்தது என நான் நம்புகிறேன் என பேசி இருந்தார் அசீம்.
பிரதீப்புக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதால் முந்தைய சீசனில் கலந்து கொண்ட அசீமும் ஏராளமான சர்ச்சையை ஏற்படுத்தினார், ரெட் கார்டும் பெற்றார் என்ற போதிலும், அவர் எப்படி டைட்டில் வின்னர் ஆனார் என பல கேள்விகள் இணையத்தில் வைரலாக முன்வைக்கப்பட்டதை தெடர்ந்து அசீம் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேர்காணலில் கருத்து தெரிவித்து இருந்தார்.