Archana Gautam: பிக்பாஸ் பிரபலத்திற்கு கொலை மிரட்டல்... சிக்கும் பிரியங்கா காந்தியின் உதவியாளர்...பாலிவுட்டில் பரபரப்பு
`ஹிந்தி பிக் பாஸ் போட்டியாளர் அர்ச்சனா கௌதம் மீது காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரியங்கா காந்தியின் பிஏ சந்தீப் சிங் கொலை மிரட்டல் விட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். ஹிந்தியில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் 16வது சீசன் போட்டியாளர்களில் ஒருவரான அர்ச்சனா கெளதம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்தி பிக் பாஸ் 16வது சீசனில் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவர் அர்ச்சனா கெளதம். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரியங்கா காந்தியின் உதவியாளர் சந்தீப் சிங் அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விட்டதாக கூறி அவரது தந்தை உத்தரபிரதேச மாநிலத்தின் மீரட்டில் நகரத்தில் உள்ள பார்தாபூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் புகாரில் சந்தீப் சிங் "என் மகள் மீது சாதி வெறி சார்ந்த வார்த்தைகளை பேசினார்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்..
அர்ச்சனா கௌதம் இந்த பிரச்சனை குறித்து விளக்கமளிக்கும் வகையில் தனது பேஸ்புக் மூலம் நேரலையில் விரிவாக பேசியுள்ளார். "பட்டியலினத்தவர்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் மீரட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் பிப்ரவரி 26ம் தேதி ராய்ப்பூரில் நடைபெறும் பொது மனதில் கலந்து கொள்ள பிரியங்கா காந்தியின் அழைப்பின் பேரில் சத்தீஸ்கரில் நடைபெற்ற காங்கிரஸ் பொது மாநாட்டில் அர்ச்சனா கௌதம் கலந்து கொண்டார். அப்போது, பிரியங்கா காந்தியை சந்தித்து பேச தகுந்த நேரம் குறித்து அவரின் உதவியாளர் சந்தீப் சிங்கிடம் அனுமதி கோரியுள்ளார். ஆனால் அவரோ பிரியங்கா காந்தியை சந்திக்க அனுமதி மறுத்துள்ளார்.
அது மட்டுமின்றி தனது சாதி குறிக்கும் வகையில் அவதூறான வார்த்தைகளை பேசியதோடு அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார். மேலும் தனக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்" என அர்ச்சனா தெரிவித்தார்.
இந்த புகார் குறித்து மீரட் நகர காவல்நிலையத்தின் எஸ்பி பியூஷ் சிங் தெரிவிக்கையில் " பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அர்ச்சனா மீது காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் உதவியாளர் சந்தீப் சிங் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்த அர்ச்சனாவின் தந்தையின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்பதை தெரிவித்தார்.