Bigg Boss Kannada: பிக்பாஸ் வீட்டில் நுழையும் 777 சார்லி பட நாய்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..என்ன காரணம்?
Bigg Boss Kannada: கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக 777 சார்லி திரைப்படத்தில் நடித்த நாய் கலந்துகொள்ள இருக்கிறது.
பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக நாய் ஒன்று போட்டியாளராக பங்கேற்க இருக்கும் தகவல் இணையதளத்தை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
பிக்பாஸ்
தொலைக்காட்சித் தொடர்களுக்கு நிகராக அனைத்து தரப்பு மக்களையும் ஒன்று சேர்த்து தொலைக்காட்சி முன் உட்கார வைத்திருக்கும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். ஆங்கிலத்தில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி இன்று தமிழ் , இந்தி , மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் மக்களிடையே புகழ்பெற்றிருக்கிறது.
பிக்பாஸ் தமிழ்
தமிழைப் பொறுத்தவரை பிக்பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கி இருக்கிறது. பிற சீசன்களைப் போல் இந்த சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க பல்வேறு பின்னணிகளைக் கொண்ட போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்கள். பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் வாசுதேவன், எழுத்தாளர் பவா செல்லத்துரை, நடிகை மற்றும் நாடகக் கலைஞர் மாயா கிருஷ்ணன், வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா , அருவி வாழ் உள்ளிட்டப் படங்களில் நடித்த நடிகர் பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ், ராப் பாடகர் நிக்ஸன் , யூடியூப் பிரபலமான பூர்ணிமா ரவி உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டிகளைத் தொடங்கியுள்ளார்கள்.
பிக்பாஸ் கன்னடம்
இதே வேளையில் கன்னடத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10 ஆவது சீசன் தொடங்க இருக்கிறது. பிரபல கன்னட நடிகர் மற்றும் இயக்குநர் கிச்சா சுதீப் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமானதாக மாற்ற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன தான். ஆனால் இந்த முறை கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கொஞ்சம் எல்லை மீறியே போய்விட்டார்கள். முதல் முறையாக மனிதர்களுடன் நாயொன்றும் போட்டியாளராக பங்கேற்க இருக்கிறது. நம்பமுடியவில்லையா. ஆனால் இந்த நாயும் நடிப்பு பின்புலம் கொண்டது தான்.
777 சார்லி படம்
கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி நடித்து வெளியான 777 சார்லி திரைப்படத்தில் நடித்திருந்த நாய் ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தது. மேலும் படத்தில் இந்த நாயின் செயல்கள் அனைவரையும் கண் கலங்க வைத்தது. மேலும் இந்த ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் 777 சார்லி திரைப்படம் வென்றது. தற்போது சார்லி படத்தில் நடித்த நாய் பிக் பாஸில் போட்டியாளராக பங்கேற்க இருக்கிறது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார் நிகழ்ச்சித் தொகுப்பாளர். இதற்கு தேவையான அதிகாரப்பூர்வ வழிமுறைகளை எல்லாம் தாங்கள் பின்பற்றி ஒப்புதல் பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் சார்லியின் பயிற்சியாளர் பிரமோத் சில காலத்திற்கு பிக் பாஸ் வளாகத்தின் வெளியே இருக்கப்போவதாகவும் தெரியப்படுத்தப் பட்டிருக்கிறது. மனிதர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் இவ்வளவு பிரச்சனை என்றால் இனி விலங்குகளுடம் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரப்போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்