Bheed Trailer Removed: தேசவிரோதம்... தவறான சித்தரிப்பு... பீட் ட்ரெய்லர் நீக்கம்.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.. ஏன்?
”ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் குரலாக பீட் எதிரொலிக்கிறது” என்றும், ”சகிப்புத்தன்மையற்ற அரசால் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது” என்றும் தற்போது ஆதரவுக் குரல்கள் வலுத்து வருகின்றன.
கொரோனா காலத்தை தவறாக சித்தரித்தாகவும் தேசவிரோத கருத்துகளை தெரிவித்ததாகவும் எதிர்ப்புகள் வலுத்ததைத் தொடர்ந்து, பீட் (Bheed) பாலிவுட் படத்தின் ட்ரெய்லர் யூ டியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் இயக்குநரின் படம்
ஆர்ட்டிகள் 15, தப்பட், மல்க் உள்ளிட்ட பாலிவுட் படங்கள் மூலம் பாராட்டுகளை அள்ளி கவனிக்கத்தக்க இயக்குநராக உருவெடுத்தவர் அனுபவ் சின்ஹா.
இவரது இயக்கத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர்களான ராஜ்குமார் ஹிரானி, பூமி பெட்நேக்கர், பங்கஜ் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீட் (Bheed).
கொரோனா காலக்கட்டத்தில் நடந்த துயரங்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களை நோக்கிப் பயணித்தது, இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வு, உணவுத் தட்டுப்பாடு, பஞ்சம் உள்ளிட்ட பல சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. ராஜ்குமார் ராவ் இந்தப் படத்தில் காவல் துறை அலுவலராக நடித்துள்ளார்.
தேசவிரோத ட்ரெய்லர் என எதிர்ப்பு
இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த மார்ச் 6ஆம் தேதி வெளியான நிலையில், தொடர்ந்து கலவையான விமர்சனங்கள் எழத் தொடங்கின.
ஒருபுறம் கொரோனா காலத்தை அச்சு அசலாகப் பதிவு செய்து மனதை பாதிக்கும் டீசரை உருவாக்கியுள்ளார்கள் என்றும், மறுபுறம் கொரோனா காலத்தை உண்மைக்கு புறம்பாகவும் ,வரலாற்றை தவறாகவும் இந்தப் படம் சித்தரிப்பதாக கலவையான விமர்சனங்கள் எழுந்தன.
மேலும், “இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையைப் போல் இது உள்ளது. மக்கள் வாழ்ந்த இடங்கள் இன்று அவர்களுக்கு சொந்தமானதாக இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பப்படுகிறார்கள்” என்பன போன்ற வசனங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், கடந்த சில நாள்களாக எதிர்ப்புகள் வலுத்தன. மேலும் இந்தப் படம் இயக்குநரின் தேசவிரோத சிந்தனைகளைப் பிரதிபலிப்பதாகவும் கடும் எதிர்ப்புகள் வலுத்தன.
யூட்யூபில் இருந்து நீக்கம்
இந்நிலையில், பீட் திரைப்படத்தின் ட்ரெய்லர் முன்னதாக யூட்யூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு தரப்பிலிருந்து எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படாத நிலையில், ட்ரெய்லர் யூட்யூபிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் ட்ரெய்லர் யூட்யூபிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக தற்போது நெட்டிசன்கள் இணையத்தில் எதிர்ப்பு தெரிவித்தும் படக்குழுவுக்கு ஆதரவாகவும் நெட்டிசன்கள் களமாடி வருகின்றனர்.
Bheed Trailer: “It feels like another partition of India, one day people were told the homes where they lived don't belong to them”
— Cataleya🛡️ (@catale7a) March 16, 2023
Relive the Covid Crisis in India, 2020-21
Government's Apathy, displaced migrant poor, Islamophobia, starvation, horrible deaths
Tears😰 Anger 😡 pic.twitter.com/v89SgnT448
”ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் குரலாக பீட் எதிரொலிக்கிறது” என்றும், ”சகிப்புத்தன்மையற்ற அரசால் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது” என்றும், ”இப்படியான கதைகளைக் கட்டுப்படுத்தி நாட்டை ஆளலாமா, ஜனநாயகப் படுகொலை” என்றும் சமூக வலைதளங்களில் படக்குழுவுக்கு ஆதரவாக ட்வீட் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
கொரோனா பொது முடக்கம் நிகழ்ந்து மார்ச் 24ஆம் தேதியுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அதனை நினைவுகூறும் வகையில் மார்ச் 24ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது.