Behind The Song: நக்மாவுடன் கவுண்டமணியை ஆட வைத்த தந்திரம்.. “வெல்வெட்டா” பாடல் உருவான கதை!
கவுண்டமணி மைக்கேல் ஜாக்சன் டிரஸ் போட்டதும் நக்மா ஷாக்காகி விட்டார். உங்களுடன் டான்ஸ் ஆட போகிறேன் என சொன்னதும் அவருக்கு இன்ப அதிர்ச்சியாகி விட்டது.
தன்னுடைய படங்களில் கவுண்டமணியை பாடல்களுக்கு ஆட வைத்த ரகசியத்தை இயக்குநர் சுந்தர் சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக், நக்மா, கவுண்டமனி, ஜெமினி கணேசன், மணிவண்ணன், திலகன், கசான் கான், ராஜீவ் என ஏகப்பட்ட பேர் நடித்த படம் “மேட்டுக்குடி”. சிற்பி இசையமைத்த இந்த படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது. இந்த படத்தில் கார்த்திக் - நக்மா இடையே டூயட் பாடலாக “வெல்வெட்டா வெல்வெட்டா” இடம் பெற்றிருக்கும்.
இந்த பாடலில் ஒரு சரணத்தில் நடிகர் கவுண்டமணியுடன், நக்மா ஆடியிருப்பார். இதை இப்போது பார்த்தாலும் காமெடியாக இருக்கும். இந்த பாடலின் பின்னால் இருக்கும் ரகசியத்தை சுந்தர். சி சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதில், “நான் ரொம்ப மிஸ் பண்ணும் நடிகர்கள் இருவர் என்றால் அது கவுண்டமணியும், கார்த்திக்கும் தான். அவர்களுடன் வேலை செய்தது என்னுடைய பொற்காலம் என்றே சொல்லலாம். மேட்டுக்குடி படத்தில் வெல்வெட்டா பாடலில் கவுண்டமணியையும், நக்மாவையும் ஆட வைக்க காரணம் இருந்தது. இப்படத்துக்கு முன்னதாக உள்ளத்தை அள்ளித்தா படத்தில் இடைவேளை காட்சிக்கு காட்சிக்கு சில நிமிடம் முன்பாக “மாமா நீ மாமா” பாடல் கவுண்டமணி பாடுவது போன்று இடம் பெற்றிருக்கும்.
அந்த நேரத்தில் சினிமாவுக்கென்று ஒரு இலக்கணம் இருந்தது. முதல் பாதியில் 3 பாடல்களும், 2 ஆம் பாதியில் 2 பாடல்களும் இருக்க வேண்டும். அதனால் அந்த பாடலை எப்படி வைத்தாலும் இடைவேளைக்கு முன்பாகதான் வரும்படி இருந்தது. அப்படி பாட்டு வைத்தால் ரசிகர்கள் தியேட்டரை விட்டு வெளியே போய் விடுவார்களே என நினைத்து அதில் கவுண்டமணியை நடிக்க வைத்தால் எப்படி இருக்கும் என யோசித்தேன். அதை சரியாக வைத்தேன். ரசிகர்கள் ரசித்து பார்த்தார்கள்.
இப்போ மேட்டுக்குடி படத்தில் அதே மாதிரி இடைவேளைக்கு முன்பாக “வெல்வெட்டா பாடல்” வைக்க வேண்டியிருந்தது. என்ன பண்ணலாம் என நினைக்கும் போது சரி கவுண்டமணியை ஆட வைக்கலாம் என முடிவு செய்து விட்டேன். அவர் அப்போது ரொம்ப பிஸி. ஜாலியாக கோவாவில் நடந்த ஷூட்டிங்கிற்கு கிளம்பி வந்து விட்டார். சரணம் ஆரம்பிக்கும்போது அவரின் காட்சிகள் இடம்பெறுவது போன்று இருக்கும்.
கவுண்டமணி மைக்கேல் ஜாக்சன் டிரஸ் போட்டதும் நக்மா ஷாக்காகி விட்டார். உங்களுடன் டான்ஸ் ஆட போகிறேன் என சொன்னதும் அவருக்கு இன்ப அதிர்ச்சியாகி விட்டது. ஆனாலும் மிகவும் சந்தோஷமாக இந்த பாடல் படமாக்கப்பட்டது” என சுந்தர் சி தெரிவித்திருந்தார்.