Adhe Kangal : செலவைப் பற்றி கவலைப்பட்ட ஏவிஎம்... கைக்கொடுத்த ஏசி திருலோகச்சந்தர்.. ஒரே வாரத்தில் உருவான அதே கண்கள்..!
ரவிச்சந்திரன், காஞ்சனா நடிப்பில் 1967 ஆம் ஆண்டு வெளியான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமான ‘அதே கண்கள்’ படம் உருவான விதம் குறித்து ஏவிஎம் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
ரவிச்சந்திரன், காஞ்சனா நடிப்பில் 1967 ஆம் ஆண்டு வெளியான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமான ‘அதே கண்கள்’ படம் உருவான விதம் குறித்து ஏவிஎம் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த ‘அதே கண்கள்’
ஏசி திருலோகசந்தர் எழுதி இயக்கிய இப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. வேதா இசையமைத்த அதே கண்கள் படத்தில் அசோகன், நாகேஷ், ஜி.சகுந்தலா, மேஜர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். தமிழில் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைகளில் இந்த படத்திற்கு முக்கிய இடமுண்டு. இந்த படம் உருவான விதமே ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் உள்ளது. இந்த கதையை ஏவிஎம் சரவணன் தெரிவித்துள்ளார்.
படம் உருவான விதம்
காரணம், அதே கண்கள் படத்தின் கதை ஒரே வாரத்தில் எழுதப்பட்டது. படிக்காத மேதை படத்தின் இந்தி பதிப்பான 'மெஹர்பன்' ஷூட்டிங்கிற்காக விலையுயர்ந்த செட்களை நாங்கள் அமைத்திருந்தோம். அப்போது ஒரு நாள் ஏசி.திருலோகசந்தர் என்னைப் பார்க்க வந்தார். அப்போது மெஹர்பானுக்காக கட்டியிருந்த செட்டைப் பார்க்க அவரை அழைத்துச் சென்றேன். நாங்கள் கிளம்பும் போது அப்பா எங்களைப் பார்த்துவிட்டு, திருலோகச்சந்தரை தனது அறைக்கு அழைத்து வரச் சொன்னார்.
அறைக்கு சென்ற திருலோகச்சந்தரிடன், இந்த படப்பிடிப்புக்கு தேவையில்லாமல் நிறைய பணம் செலவழிக்கப்பட்டதாக அப்பா கவலைப்பட்டார். பொதுவாக ஷூட்டிங் முடிந்தவுடன், நாங்கள் அமைக்கும் செட்களை மற்றவர்களுக்கு வாடகைக்கு விடாமல் பிரித்து விடுவோம். 1975 க்குப் பிறகுதான், எங்கள் ஸ்டுடியோக்களை வாடகைக்கு விடும் வகையில் மற்ற தயாரிப்பாளர்களுக்காக அதைத் திறந்தோம்.
இந்தச் சூழ்நிலையில் மெஹர்பனுக்காக அமைக்கப்பட்ட விலையுயர்ந்த செட்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்று என் தந்தை கவலைப்பட்டது இயல்பான ஒன்றாகவே இருந்தது. மேலும் படப்பிடிப்பு முடிந்ததும் செட்களை இடிக்க வேண்டாம் என்று முடிவு செய்த அவர், அதே செட்களை திறம்பட பயன்படுத்தக்கூடிய பொருத்தமான கதையை தயார் செய்யுமாறு ஏசி. திருலோகச்சந்தரைக் கேட்டுக் கொண்டார். இந்த செட்டிற்கு எந்த ஒரு சமூகக் கதையும் பொருத்தமானதாக இருக்காது என்பதைக் கவனித்த இயக்குநரோ அதற்கேற்ற ஒரு க்ரைம் த்ரில்லரை உருவாக்கினார். அந்த கதைக்கு 'அதே கண்கள்' என்று தலைப்பு வைக்கப்பட்டது.
டி.ஆர்.ராமண்ணாவுடன் பணியாற்றிய டி.என்.பாலு படத்திற்கு காமெடி டிராக்கை எழுதினார். ஒரு வாரத்தில் முழு திரைக்கதையும் தயாராகி, படம் நன்றாக ஓடியது.
இது ஒரே நேரத்தில் தெலுங்கில் Ave Kallu என்ற பெயரில் தயாராகி வெளியானது. ஒரு பெண்ணின் குடும்பத்தை முகமூடி அணிந்த கொலைகாரன் ஒருவர் பின்தொடர்வதையும், அவளது காதலன் அப்பிரச்சினையில் இருந்து காப்பாற்றுவதும் விறுவிறு திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்தது. அந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய வசூலையும் இப்படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.